வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (12/10/2018)

கடைசி தொடர்பு:08:55 (12/10/2018)

தினமும் இடுப்பளவு தண்ணீரைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்! - ரூ.14.06 கோடி பாலம் என்னாச்சு?

Bridge

வண்டல் - அவரிக்காடு கிராமங்களுக்கிடையே இணைப்புப் பாலம் கட்டும் பணி, கடந்த 8 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது.  இதனால் பள்ளி மாணவ மாணவிகளும், பொது மக்களும் தினமும் ஆற்றைக் கடந்து நீரில் நனைந்துகொண்டே 2 கி.மீ தூரம் பயணிக்கவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.  

Bridge

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வண்டல், குண்டுரான்வெளி ஆகிய கிராமங்கள் உள்ளன.  மீன்பிடித் தொழிலைப் பிரதானமாகக் கொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கிருந்து பள்ளிக்கூடம் மற்றும் வெளியூர் தொடர்புகளுக்கு அவரிக்காடு வழியாகத்தான் செல்ல வேண்டும்.  வண்டல் கிராமத்திலிருந்து அவரிக்ன்ட்டுக்கு சாலை வழியாகச் செல்ல வேண்டுமானால் 23 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும்.  சரியான போக்குவரத்து வசதியுமில்லை.  ஆனால், வண்டல் - அவரிக்காடு இடையே ஓடும் நல்லாறு, அடப்பாற்றை 2 கி.மீ தூரம் கடந்துசென்றாலே அவரிக்காடு சென்றுவிடலாம்.  இந்நிலையில், பொது நலன் கருதி இரண்டு கிராமங்களையும் இணைக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.14.06 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி, 8 ஆண்டுகளாகியும் இன்று வரை நிறைவடையவில்லை.  

இதுபற்றி கிராம மக்களிடம் பேசியபோது, “கடந்த சில நாள்களாக, வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கன மழை பெய்து வருவதால், நல்லாறு மற்றும் அடப்பாற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.  ஆற்றைக் கடந்து மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதால், ஆடைகள் ஈரமாகிவிடுகின்றன.  இதனால், மாற்று ஆடைகளுடன் நாள்தோறும் வெளியூர்களுக்குச் செல்வதுபோல மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்லவேண்டியுள்ளது.  ஆற்று நீரில் இறங்கிச் செல்லும் மாணவர்கள் பூச்சிகளால் கடிபடுகின்றனர்.  இன்னும் கூடுதலாக மழை பெய்தால், ஆற்று வழியாகப் போக முடியாது.  எனவே, இந்தப் பாலத்தை போர்க்கால அடிப்படையில் உடனே கட்டித்தர வேண்டும்.  அதுவரைல் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல வாகன வசதியை மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டும்” என்றனர்.