வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (11/11/2018)

கடைசி தொடர்பு:05:00 (11/11/2018)

8 ஆண்டுகளாக நடைபெறும் பாலம் அமைக்கும் பணி - ஆறுகளைக் கடக்க ஆறுதல் தந்த படகு சேவை!

Boat Service

தினமும் உயிரைப் பணயம் வைத்து, இரண்டு ஆறுகளைக் கடந்து, நீரில் நனைந்து பயணித்து வந்த கிராம மக்களுக்கு அரசின் இலவச படகு சேவை ஆறுதலைத் தந்துள்ளது.  

படகு சேவை

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடலோரக் கிராமங்களான வண்டல்-அவுரிக்காடு இடையே நல்லாறு மற்றும் அடப்பாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.  இக்கிராம மக்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வணிகம் போன்ற வாழ்வின் அன்றாட தேவைகள் அனைத்திற்கும் இந்த ஆறுகளைக் கடந்துதான் செல்ல வேண்டும்.  எனவே, இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான வண்டல்-அவுரிக்காட்டை இணைக்கும் இணைப்புப் பாலம் கட்டும் பணி ரூ.14.6 கோடி செலவில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கியது.  எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்பணி இன்று வரை முடியவில்லை.  கோடைக் காலத்தில் ஆற்றில் இறங்கி நடந்து வரும் மக்கள், மழைக் காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தனியார் படகு மூலம் நபர் ஒன்றுக்கு ரூ.10 கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

இந்நிலையில், படகு கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் தனியார் படகு சேவை இரண்டு தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.  இதனால் வேறு வழியின்றி பொது மக்களும், பள்ளி மாணவர்களும் ஆற்று நீரில் இறங்கி, உயிருக்குப் பயந்து கடந்து வந்தனர்.  இந்தத் தகவல் வேதாரண்யம் தாசில்தார் ஸ்ரீதருக்குத் தெரியவே, உடனடியாக கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டார்  அடுத்து, நாகை கலெக்டருடன் பேசி மீன்வளத் துறை மூலம் அரசின் இலவசப் படகு சேவையை தொடங்க ஏற்பாடு செய்தார்.  காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் 6.30 மணி வரையிலும் இப்படகு இயங்கும்.  

இதுபற்றி வேதாரண்யம் தாசில்தார் ஸ்ரீதரிடம் பேசியபோது, “பாலம் கட்டும் பணிகள் இந்தாண்டுக்குள் முடித்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக இலவசப் படகு சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.  இச்சேவை இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.