வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:51 (29/11/2018)

பணிகள் நிறைவடைந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கட்டடம் - பள்ளி மாணவர்கள் அவதி

நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் பள்ளியின் புதிய கட்டடமும், கழிவறையும், மாணவர்களுக்குப் பயன்படாமல், பழுதடைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

பள்ளி கட்டடம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே, ஆச்சாள்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. மிகவும் பழைமையான கட்டடத்தில் பயின்றும், சிறிய கழிவறையைப் பயன்படுத்தியும், மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, இந்த வளாகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ,10 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2011-ம் ஆண்டு புதிய பள்ளிக் கட்டடமும், பெரிய கழிவறையும் கட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை திறப்புவிழா காணாமல், பூட்டியே கிடப்பதால் பழுதடைந்து வருகிறது.

இதுகுறித்து, பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பியும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு பள்ளி கட்டடத்தைத் திறந்து விடவில்லை. இதனால் மாணவர்கள் கண்ணெதிரே மிகப்பெரிய கட்டடமும் கழிவறையும் இருந்தும் அதை ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே முடிகிறது.

இந்த அவலத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக கட்டடத்தையும், கழிவறையையும் மாணவர்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.