வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (23/12/2018)

கடைசி தொடர்பு:04:00 (23/12/2018)

’கடைமடையில் மழை’- சம்பா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து கதிர் முற்றும் நிலையில், நீரின்றி காய்ந்து வாடுவதால், பாசனத்திற்கு ஆறுகளில் உடனடியாக தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் திடீரென  பெய்த மழை, விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

 

மழை

 

காவிரியின் கடைமடை பகுதிகளான, நாகை மாவட்டம் தரங்கம்பாடி,மற்றும் சீர்காழி வட்டாரப்பகுதிகளில்  சுமார் 30ஆயிரம் எக்டேருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர்கள் செழித்து வளர்ந்து தற்போது கதிர் முற்றும்  நிலையில் உள்ளது. பாசன ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால், தண்ணீரின்றி சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாயநிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, அடுத்த மாதம் வரை பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கொள்ளிடம், சீர்காழி,மற்றும் தரங்கம்பாடி  சுற்றுவட்டாரப் பகுதிகளில், பரவலாகவும், மிதமாகவும் மழை பெய்து வருகிறது

இதுபற்றி விவசாயிகளிடம் பேசியபோது," தற்போது கதிர் வரும் நிலையில் உள்ள பயிர்களுக்கு இந்த மழை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் சில தினங்களாக பயிர்களைத் தாக்கி வந்த புகையான் நோய், பூஞ்சான் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், பயிர்களைப்  பாதுகாக்கவும் இந்த மழை  பயன்படும். சரியான நேரத்தில் இயற்கை அன்னை உதவி செய்திருக்கிறாள்.பயிர்களுக்கு உரமிட்டது போல் இந்த மழை அமைந்து, மிகவும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது" என்றனர்.