வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (02/01/2019)

கடைசி தொடர்பு:12:50 (02/01/2019)

`ஒரு ஓட்டுக்கு எவ்வளவு ரேட்!’ - தீவிர ஆலோசனையில் கட்சிகள் #ThiruvarurByElection

Thiruvarur

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி திருவாரூர். கடந்தாண்டு ஆகஸ்டு 7-ம் தேதி, கருணாநிதி மறைவையொட்டி தற்போது திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி்

 

Thiruvarur

 

திருவாரூர்  தொகுதியில் இதுவரை தி.மு.க. 7 முறையும், கம்யூனிஸ்டு 5 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வென்றிருக்கிறது. அ.தி.மு.க. ஆரம்பித்த எம்.ஜி.ஆர். காலத்திலும், அதன்பின் ஜெயலலிதா காலத்திலும், இத்தொகுதியில் அ.தி.மு.க. ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை இந்த நிலையில், 'கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு களமிறங்கும் தி.மு.கவை, தோற்கடித்து, அ.தி.மு.க.வரலாற்றில் முத்திரை பதிக்க இருக்கிறார் எடப்பாடி' என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

இது பற்றி, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசியபோது, `` ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றிபெற்ற போதிலும், அத்தொகுதியில் அடிப்படை கட்டமைப்பு ஏற்பாடுகளையும், பணப்பட்டுவாடா லிஸ்ட் எடுத்து, வாக்காளர்களுக்கு முன்பணம் கொடுத்தது ஒன்றுபட்ட அ.தி.மு.க.தான். அந்த அடித்தளத்தின் மீதேறி, வெற்றிக்கனியைப் பறித்துவிட்டார் தினகரன். ஆனால், சொந்த மாவட்டமான திருவாரூரில், `தனக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது' என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தினகரன். ஆர்.கே.நகர் பார்முலாவை அவர் இங்கே செய்ய முடியாது. அதற்கான ஆட்களும் தினகரனுக்கு இங்கு கிடையாது.

ஸ்டாலின்

திருவாரூர் தொகுதியைப் பொறுத்தவரையில், கருணாநிதி மீது இத்தொகுதி மக்களுக்கு தனி மரியாதை இருந்ததும், ` நான் போட்டியிடும் கடைசித் தேர்தல் இதுதான்' என கருணாநிதி உருகியதும், அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. தற்போது கருணாநிதி இல்லாத நிலையில், திருவாரூர் மாவட்ட தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில்  உள்ள நிலையில், அ.தி.மு.க. வெற்றி பெறத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.

மோடி

அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலை வைத்துதான் எடப்பாடி அரசை எடைபோட காத்திருக்கிறது பி.ஜே.பி. `கட்சியில் பிளவுகள் இருந்தாலும் ஒன்றுபட்ட அ.தி.மு.க. எங்கள் பக்கம்தான் உள்ளது' என்பதை நிரூபிக்கும் வகையில் திருவாரூரில் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் இருக்கிறோம். இதற்காக சுமார் 2 லட்சத்து 60 ஆயிரத்து 298 வாக்காளர்களில், ஒரு ஓட்டுக்கு ரூபாய் 10,000 கொடுத்தாவது, நடுநிலை மற்றும் மாற்று கட்சி வாக்காளர்களை வளைத்துப்போட கடந்த ஆறு மாத காலமாக திட்டம் வகுத்திருக்கிறோம். தொகுதியில் பல்வேறு இடங்களில் போதுமான பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர்செல்வம் அல்லது அமைச்சர் காமராஜுக்கு மிகவும் நெருக்கமான கலியபெருமாள் ஆகிய இருவரில் ஒருவர்தான் அ.தி.மு.க.சார்பில் களமிறங்குவார்கள். யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. வாகைசூடுவது உறுதி" என்கின்றனர். ஆரம்பமே பணமாக இருக்கிறதே.. இது எதில் போய் முடியுமோ?