`எங்களுக்கு வீடுமில்லை ரேஷன் கார்டும் இல்லை!’ - வாழ்வாதாரத்துக்காகப் போராடும் முதியவர் | An old man who fights for livelihood

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (26/01/2019)

`எங்களுக்கு வீடுமில்லை ரேஷன் கார்டும் இல்லை!’ - வாழ்வாதாரத்துக்காகப் போராடும் முதியவர்

முதியவர்

இந்தியா இன்று 70 வது குடியரசு தின நாளை கொண்டாடும் வேளையில், எதேச்சையாக அந்த முதியவரை சந்தித்தோம். ``தஞ்சாவூர் பக்கத்துல திருக்காட்டுப்பள்ளிதான் நான் பொறந்த ஊர்னு எங்க அப்பா சொன்னாங்க. என் பேரு வீரையா. வெள்ளைக்காரன் காலத்தில்  பொறந்த எனக்கு இப்போ வயசு 80. என் பொஞ்சாதி பேரு நாடி முத்தம்மாள். `ஈயம் பூசறது. அம்மிக்கல் கொத்தறது. குடை ரிப்பேர் செய்யறது’ இதுதான் எங்க குலத்தொழில். தஞ்சாவூரிலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் எல்லா ஊரும் எங்களுக்கு அத்துப்படி. ஊர் ஊர் மாறிக்கிட்டே இருப்போம். அன்றாடம் உழைச்சி, கிடைக்கிற வருமானத்தை வைச்சு சாப்பிடுறது. இப்படியேதான் எங்க காலம் ஓடுது. இப்போதெல்லாம் மிக்ஸி, கிரைண்டர் காலமா போச்சு. குடக்கல் அம்மியெல்லாம் மறைந்து போச்சு. ரூ.50-க்கு புதுக்குடை கிடைக்கிறதால பழசை யாரும் ரிப்பேர் பண்றதில்ல. அதனால யாரு என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறோம். அதுல வரும் காசில வாழறோம். ஆனா, பிச்சை மட்டும் எடுக்கக் கூடாதுன்னு எங்க அப்பா சொன்ன சத்தியத்தை மீறினதில்ல.

நாலு வருஷத்துக்கு முன்னால நாகப்பட்டினத்தில் என் பொஞ்சாதி காணாமப் போயிட்டா. அப்போ அவளுக்கு கண்ணும் சரியா தெரியாது. காதும் சரியா கேட்காது. எங்க போனாளோ... உசிரோட இருக்காளோ இல்லியோ...தெரியலை. ஒரு வருஷமா தேடிப்பார்த்தோம் கிடைக்கலை. எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளும் ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுத்துட்டு போய்ச் சேர்ந்துட்டா. ரெண்டு வயசுலேர்ந்து அந்தப் பேரனை எடுத்து வளர்த்தேன். அவனுக்குப் பேரு மூர்த்தி. இப்போ அவன்தான் எனக்குக்  கஞ்சி ஊத்துறான்.

இதுவரைக்கும் எங்களுக்கு ஒரு வீடும் இல்ல. ரேஷன் கார்டும் இல்ல. கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தால் கிடைக்கும்னு சொன்னாங்க. பல தடவை தஞ்சாவூரில் கொண்டு போய்க் கொடுத்துப் பார்த்தேன். ஆனால், கிடைக்கலை. எங்களுக்குதான் அட்ரஸே இல்லையே. எப்படி தருவாங்க? வெள்ளைக்காரன் காலம் தொட்டு இன்னைய வரைக்கும் இப்படியேதான் வாழறோம். என் காலம் முடியப்போகுது. என் பேரன் காலத்திலாவது அரசாங்க உதவி ஏதாவது கிடைக்குமான்னு தெரியல?’’ என்றார். நெஞ்சு கனத்தது.