‘காரைக்கால் கடற்கரையில் கஞ்சா பண்டல்கள்?’ - போலீஸார் தீவிர விசாரணை | Ganja Bundles seized at Karaikkal

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (03/03/2019)

கடைசி தொடர்பு:08:20 (03/03/2019)

‘காரைக்கால் கடற்கரையில் கஞ்சா பண்டல்கள்?’ - போலீஸார் தீவிர விசாரணை

காரைக்கால் மேடு மீனவ கிராம கடற்கரையில் கஞ்சா பண்டல்கள் கரை ஒதுங்கி கிடந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கஞ்சா பண்டல்கள்

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவ கிராம கடற்கரையில் பாலித்தீன் கவர் சுற்றப்பட்டு , பிளாஸ்டிக் டேப் சுற்றிய பிரிக்கப்படாத 7 பண்டல்களும், பிரிந்த நிலையில் 2 பண்டல்களும்  நேற்று மர்மமான முறையில் கரை ஒதுங்கிக்கிடந்தன. இதனைக் கண்ட அப்பகுதி கிராம பஞ்சாயத்தார்கள் காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அந்தப் பண்டல்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போதை பொருளான கஞ்சா எனத் தெரிய வந்தது. அதனைக்  காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது எந்த மாதிரியான போதை பொருள் என்பதை ஆய்வு செய்ய புதுச்சேரியிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

காரைக்காலில் சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் உபயோகம் அதிகரித்து வருகிறது. இலங்கையிலிருந்து கோடியக்கரை ,வேதாரண்யம் கடற்கரை பகுதிக்கு படகு மூலம் கடத்திவரப்படும் போதைப்பொருள் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு சிலர் நாகப்பட்டிணத்திலிருந்து வாங்கி வந்து காரைக்கால் பகுதியில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் காரைக்கால் கடற்கரை பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய பண்டல்கள் கரை ஒதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல் பகுதியில் யாராவது இதனை கடத்திக் கொண்டு வரும்போதுகடலோர காவல் படையினரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக கடலில் தூக்கி வீசி எறிந்திருக்கலாம். அல்லது காரைக்கால் கடற்பகுதியில் கரை சேர்க்கப்பட்ட  இந்த பண்டல்கள், ஏஜெண்டுகளின் கையில் கிடைப்பதற்கு முன்பே மீனவ பஞ்சாயத்தார் மூலம் தகவல் தெரிந்து போலீசாரிடம் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 


[X] Close

[X] Close