திருநள்ளாறு காவல் நிலையத்தில் மூலிகைத் தோட்டம் - காவலர்களின் அசத்தல் முயற்சி! | Herb garden in police station

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:09:20 (05/03/2019)

திருநள்ளாறு காவல் நிலையத்தில் மூலிகைத் தோட்டம் - காவலர்களின் அசத்தல் முயற்சி!

திருநள்ளாறு காவல் நிலையத்தின்  பின்புறமுள்ள வளாகத்தில், சிறிய மூலிகைத் தோட்டம் அமைத்து பொதுமக்களுக்குப் பயன்படும்படி பராமரித்துவருவது அனைவரது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

மூலிகை தோட்டம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் நிலையத்தின் பின்புறம் தரிசாகக்கிடந்த இடத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளனர். அத்தோட்டத்தில்  துளசி, கற்பூரவள்ளி, சிறியாநங்கை, பாகற்காய் , அருகம்புல், ஓமவல்லி, ஆடாதொடை, தூதுவிளை, லெமன் க்ராஸ், கருந்துளசி, வேம்பு, முருங்கை , வள்ளிக்கிழங்கு, முசுமுசுக்கை, கீழாநெல்லி போன்ற பல்வேறு வகையான மூலிகைகளையும் , உடலுக்கு ஆரோக்கியம் தரும்  பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற பலவகைக்  கீரைகளையும் வளர்த்து வருகின்றனர் காவல் துறையினர். 

 இந்த சிறப்பான முயற்சிக்கு காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன்,  திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன்  மற்றும்  காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து நிலை காவலர்களும் பெரும் பங்களித்துவருகின்றனர்.

 காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்களும் தங்கள் பிரச்னைகளை  மறந்து, அந்தத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து  செல்கின்றனர்.மேலும், தங்களுக்குத் தேவையான  மூலிகைகளை அனுமதிபெற்று பறித்துச்செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் காவல் நிலையத்தில் நாட்டுஇன நாய் ஒன்றை மிகவும் செல்லமாக  வளர்த்துவருகின்றனர். எப்போதும் திறந்தே இருக்கும் காவல் நிலையத்திற்கு இந்த நாய் கூடுதல் பாதுகாப்பு. திருநள்ளாறு காவல் நிலயத்தாரின் இந்த மண் மணக்கவைக்கும் செயல் அனைவரும் பாராட்டும்வண்ணம் உள்ளது.

 


[X] Close

[X] Close