அரசு பள்ளியில் சேர்க்க பணமா? பெற்றோர்கள் கொதிப்பு

சேலம்: அம்மாபேட்டை காமராஜர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டதால் பெற்றோர்கள் ப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியில் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில், தனியார் பள்ளிகளில் சேர்க்க வசதியில்லாத அம்மாப்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர்.

தற்போது அந்த பள்ளியில் 6ஆ-ம் வகுப்பு முதல் 8ஆ-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்க நடந்து வருகிறது. அங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களிடம் 10ஆயிரம் ரூபாய் பணம் நன்கொடை கேட்டுள்ளனர். அப்படி பணம் கொடுக்காவிட்டால் மேயர், துணை மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரை கடிதங்களை வாங்கி வந்தால் தான் தங்களது குழந்தைகளை சேர்க்க முடியும் என கூறியுள்ளனர்.


இதை கண்டித்து இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களையும், ஜனநாயக வாலிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களையும் சமாதானம் செய்தனர். அதையடுத்து அனைவரும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!