விளை நிலங்கள் கட்டிடமாக்கப்படுகின்றன; விவசாயிகள் குமுறல்

நெல்லை: கட்டிடங்களுக்காக விளை நிலங்கள் அழிக்கப்படுவதாக நெல்லையில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலரும் பேசுகையில், விளை நிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நகர்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் விளை நிலங்களை அழித்துவிட்டு கட்டிடங்கள் கட்டுகிறார்கள். இது மோசமான விலைவுகளை ஏற்படுத்தும்.

உர கடைகளில் விவசாயிகளுக்கு வழங்கும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சில கடைகளில் ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. இந்த ஆண்டு மழை பொய்த்ததால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. சிலருக்கு நிவாரணம் கொடுக்கப்படவே இல்லை என தெரிவித்தனர்.


இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் , விளை நிலங்களை கட்டிடங்களாக மாற்றுவதில் யாருக்கும் உடன்பாடு கிடையாது. இதற்காக நகரமைப்பு குழு அமைத்து அந்த குழுவினர் ஆலோசனை நடத்தி எந்த இடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கலாம் என பரிசீலனை செய்வார்கள்.

உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரண உதவி கிடைக்காதவர்கள் முறையீடு செய்தால், விடுபட்டவர்களுக்கு வழங்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!