கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் - விவசாயிகள் வேதனை | Food items stored in open place, farmers request for immediate action

வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (26/03/2019)

கடைசி தொடர்பு:20:16 (24/04/2019)

கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் - விவசாயிகள் வேதனை

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் வீணாகுவதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை.

 

நெல்மூட்டைகள்

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள குன்னம், வடரெங்கம், மாதிரவேளுர், பனங்காட்டாங்குடி, புத்தூர், அரசூர், பழையபாளையம், அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா அறுவடை நெல்லை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, எருக்கூரில் உள்ள அரசு நவீன அரிசி ஆலைக்கும் மணல்மேட்டில் உள்ள அரசின் குடோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல் அறுவடை முடிந்த நிலையில் நெல்கொள்முதலும் கடந்த மார்ச்10 -ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை கடந்த ஒரு மாததிற்கும் மேலாக எடுத்துச் செல்ல லாரிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வரவில்லை. இதனால் நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலைய வளாகத்திலும் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிப்பகுதியில், நெல் மூட்டைகளை கறையான் தின்று வருவதால் நெல் வீணாகிறது. வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், எடை குறைந்து கொண்டே செல்கிறது. ஆடுமாடுகள் நெல்மூட்டைகளை கடிப்பதால் சாக்கு கிழிந்து வீணாகிறது. எலிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடைவெளிகளில் புகுந்து மூட்டைகளை கடித்து வருவதால், நெல் விரயமாகிறது. கொள்முதல் நிலையங்களில் வேலை பார்த்து வரும் சுமைதூக்கும் தொழிலாளர்களும் அவர்களுக்குரிய ஊதியத்தைப் பெற முடியாமல் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி அனுப்ப தினந்தோறும் லாரிகளின் வரவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இது குறித்து சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில், ``ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 9,000 முதல் 12,000 நெல் மூட்டைகள் வரை திறந்த வெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களிலும் இதே நிலைதான் உள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் நவீன அரிசி ஆலை வளாகத்தில் 50,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இது இரண்டு வருடங்கள் ஆகியும் செயல்படாமல் உள்ளது. அந்தக் குடோனை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால் அனைத்து மூட்டைகளைகளையும் சேதமின்றி பாதுகாக்க முடியும். எனவே, திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்ட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

படங்கள் : பா.பிரசன்னா