`கஜா புயல் பாதித்தபோது, தமிழகத்தை எட்டிப்பார்த்தாரா மோடி?’ - வைகோ கேள்வி | vaiko election campaign at Nagapattinam district

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:52 (06/04/2019)

`கஜா புயல் பாதித்தபோது, தமிழகத்தை எட்டிப்பார்த்தாரா மோடி?’ - வைகோ கேள்வி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ராமலிங்கத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வைகோ நேற்றிரவு மயிலாடுதுறையில் பிரசாரம் செய்தார்.

வைகோ

வைகோ தமது பரப்புரையில், `` 4 முறை எம்.எல். ஏ, 4 முறை சேர்மன் எனப் பொறுப்புகளை வகித்து, எளிமையின் இலக்கணமாக, நேர்மையின் சின்னமாக, குண்டுமணி அளவுக்கு விரல் நீட்டி யாரும் குற்றம் சொல்ல முடியாதவராக, ஆருயிர் அண்ணன் கோ.சி.மணியின் வலதுகரமாகத் திகழ்ந்த சகோதரர் திருவிடைமருதூர் ராமலிங்கத்துக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நஞ்சை கொஞ்சி விளையாடிய தஞ்சை, பஞ்சப் பிரதேசமாக மாறிவிடாமல் இருக்க, மேக்கேதாட்டூவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க, வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க, 80 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர, பருப்பு ஊழல், கல்வித்துறை ஊழல், சுகாதாரத்துறை ஊழல் என ஊழல் மலிந்த இந்த அரசை அகற்ற, மத்திய அரசு தமிழகத்துக்குச் செய்யும் வஞ்சகத்துக்கெல்லாம் துணை போகின்ற எடப்பாடி பழனிசாமியின் எடுபிடி அரசை வீட்டுக்கு அனுப்ப, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறுகின்ற 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் உதயசூரியன் ஜெயிக்கும். தி.மு.க ஆட்சி மலரும். இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் ரத்தக் களறி ஏற்படுத்துகிற இந்துத்துவா  பிரதிநிதியாகச் செயல்படும் நரேந்திர மோடி அரசை அகற்ற வேண்டும். கஜா புயல் தாக்கியபோது தமிழகத்துக்கு, வாழ்வாரத்தை இழந்து தவித்த விவசாயிகளுக்கு ஒரு சொல், ஆறுதல் சொல், அனுதாபச் சொல் சொன்னாரா மோடி. தமிழகத்தை எட்டிப்பார்த்தாரா, தேவையான உதவிகள்தான் செய்தாரா. முல்லைப் பெரியாறு பிரச்னை தீர, மேட்டூர் அணைக்கு காவிரி தண்ணீர் தொடர்ந்து வர, நீட் தேர்வை ஒழித்திட, சமூகநீதி காத்திட ,100 நாள் வேலைத்திட்டம் 150, 200 நாள் என அதிகரிக்கச் செய்திட, சரக்கு சேவை வரியிலிருந்து வணிகர்களை மீட்டிட, மனிதநேயம் காத்திட, ஜனநாயகம் தழைத்திட பாசிச சக்திகளை அகற்றிட, மக்கள் எஜமானர்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்" என்று கூறினார்.