`வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைப்போம்!' - நாகை அருகே கொதித்த கிராம மக்கள் | We are going to submit our voter id says villagers near nagai

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (06/04/2019)

கடைசி தொடர்பு:09:25 (06/04/2019)

`வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைப்போம்!' - நாகை அருகே கொதித்த கிராம மக்கள்

சீர்காழி அருகே வெள்ளைமணல் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கறுப்புத்  துணிக் கட்டி கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, 'தேர்தல் நாளன்று வாக்காளர் அட்டையை அரசிடம் திருப்பி ஒப்படைப்போம்' என்று அறிவித்துள்ளனர்.

கிராம மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி ஊராட்சியில் வெள்ளைமணல் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த 260 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம்,  மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை இயங்கி வருகின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து வெள்ளைமணல் கிராமத்துக்குச் செல்ல 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி அமைத்து தரப்படவில்லை. தனியார் வயல் வழியில்தான் போக்குவரத்து. இதுகுறித்து அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பலமுறை தெரிவித்தும் சாலை அமைக்கப்படவில்லை. வனத்துறைக்குச் சொந்தமான இடத்தைக் கடந்துசெல்ல வேண்டியிருப்பதால் வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதியளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதுபற்றி கிராமத் தலைவர்களிடம் பேசியபோது, ``எங்க கிராமத்துக்கு ஒரு வாரத்துக்குள் சாலை அமைக்கத் தவறினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதுடன் வாக்குப் பதிவு நடைபெறும் 18-ம் தேதி சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். அடிப்படை வசதி கிடைக்காத எங்களுக்கு வாக்குரிமை எதற்கு... சாலை அமைக்காததற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்புத் துணியைக் கட்டி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். வாக்குப்பதிவு நடைபெறும் வரும் 18-ம் தேதி வரை இக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் கறுப்புத் துணியை பேட்சாக அணிந்திருப்போம்" என்றனர்.