வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (29/05/2013)

கடைசி தொடர்பு:12:11 (29/05/2013)

ஆலங்குடி குரு கோவிலில், ‘குரு’வைவிட அமைச்சருக்கு அதிக மரியாதை

திருவாரூர்: ஆலங்குடி குரு கோவிலில் நேற்று இரவு குரு பெயர்ச்சி விழா நடந்தது. அங்கே குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது. இது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு ஆலங்குடி கோவிலில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகவே இருந்தது. குருபகவானை தரிசிக்க கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசன வரிசை என்று 500 ரூபாய்க்கு தனி வழி ஏற்படுத்தி இருந்தனர். முதலில் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தனர். அரைமணி நேர காத்திருப்பிற்குப்பிறகு என்ன நினைத்தார்களோ ஏறி குதித்து உள்ளே போங்கள் என அனுமதித்தார்கள்.  சரியாக இரவு ஒன்பது மணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குடும்ப சகிதம் உள்ளே நுழைந்தார்.

அப்போது, 500 ரூபாய் டிக்கெட் நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்குபவர்களிடம், அமைச்சர் வந்து போன பிறகு தான் நீங்கள் உள்ளே போக அனுமதிக்கப்படுவீர்கள். சம்மதம் என்றால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் கண்டிப்புடன் கூறி விட்டது. அப்படியும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் டிக்கெட் வாங்கி காத்துக்கிடந்தனர்.

சரியாக குருப்பெயர்ச்சி நேரமான 9.10க்கு அமைச்சர் தரிசனம் செய்து விட்டுப்போன பிறகு தான் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருடன் அவருடைய அடிபொடிகள் சுமார் இருபத்தைந்து பேருக்கு மேல் கூடவே வந்தனர். அவர்களுக்கும் கோவிலில் தரப்படும் மரியாதை தரப்பட்டது. அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.

கோயில் நிர்வாகம் குரு பகவானுக்கு கொடுத்த மரியாதையைவிட அமைச்சருக்கு கொடுத்த மரியாதையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து சென்றனர்.

வீ.மாணிக்கவாசகம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்