‘ஓட்டுக்கு பணம் கொடுக்கட்டும்.. ஆனால்!’ - நாகை, மயிலாடுதுறை மக்களின் மனநிலை | Nagai people mindset on Lok Sabha Election

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (07/04/2019)

கடைசி தொடர்பு:10:50 (07/04/2019)

‘ஓட்டுக்கு பணம் கொடுக்கட்டும்.. ஆனால்!’ - நாகை, மயிலாடுதுறை மக்களின் மனநிலை

election

 

காலமும்,சூழ்நிலையும் மாறும்போது மக்கள் மனநிலையும் மாறுவது இயற்கைதான்.தேர்தல் வந்தால் அரசியல்வாதிகள் வீடு வரை வந்து வணங்குவார்கள். வாக்கினை பெற்று பதவிகளில் அமர்ந்து கோடிகளில் பணத்தினை சம்பாரித்திட, நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை வாரி வழங்குவார்கள்.இதெல்லாம் 'சீசன் பிசினஸ்' என்பதை மக்களும் புரிந்து வைத்துள்ளார்கள்.இத்தேர்தலில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதை மயிலாடுதுறை, நாகை நாடாளுமன்றத் தொகுதிகளைச் சுற்றி வந்தபோது அறிய முடிந்தது.

election

 

அவற்றில் சில..

* தேர்தல் பரபரப்பு மக்களிடத்தில் இல்லை. எந்தக் கட்சி வேட்பாளர் ஊருக்குள்  வந்தாலும்,அவர்களை வரவேற்பதிலோ,வாசலில் எட்டிப் பார்ப்பதிலோ யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. 

 

*  ஓட்டுக்குப்  பணம்  பெறுவதில் மக்களிடம் பெரிய  எதிர்பார்ப்பு உள்ளது. யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர். ஆனால் முன்புபோல் ஓட்டுக்கு அதிகமாக யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே ஓட்டு...என்ற எழுதப்படாத விதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்பறிவுயில்லாத பாமர மக்கள்கூட ' யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம்.எங்க விருப்பத்திற்கே வாக்களிப்போம்' என்கிறார்கள். 

 

*  'யார் வென்றாலும் நம்மை திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஊருக்கு  நல்லதும் செய்யப்போவதில்லை. இப்போது வருகிறவர்கள் இனி அடுத்த தேர்தலுக்குதான் வருவார்கள் 'என்ற பேச்சு மக்களிடத்தில் பரவலாக  உள்ளது .

 

* தேர்தல் அலுவலகம், சுவர் விளம்பரம் போன்ற முதற்கட்டப் பணிகளுக்கு வாக்குச்சாவடி ஒன்றுக்கு தி.மு.க. தரப்பில் ரூ.5,000 மும்,அ.தி.மு.க. தரப்பில் ரூ 10,000 மும்,வழங்கப்பட்டுள்ளது. இதனை சில ஊர்களில் ஒரளவு சரியாக செலவு செய்துவிட்டும்,சில ஊர்களில் முக்கிய புள்ளிகள் பங்கிட்டுக்கொண்டும்,அடுத்த வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

 

*  தேர்தல் அலுவலகங்களில் மாலை நேரங்களில் கூடுவோருக்கு மதுவும் ,கைசசெலவுக்கு பணமும் தருவது தேர்தல்கால வழக்கம். ஆனால் இதுவரை இவை எந்தக்கட்சியிலும்  வழங்கப்படவில்லை.

 

* ஒவ்வொரு கட்சியிலும் கிளைச் செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள்தான்  வேட்பாளர்களிடமிருந்து பணத்தை  எதிர்பார்த்து காத்துள்ளனர்.'பணப்  புழக்கமே இல்லை. கைப்பணத்தில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது'என்று புலம்புகிறார்கள்.கட்சிக்கார்ர்களும் முன்புபோல் உணர்வுபூர்வமாக பணியாற்றவில்லை.


 *ஒவ்வொரு ஜமாத் மற்றும் தேவாலயங்களில் மோடி எதிர்ப்பு பிரசாரம்  தீவிரமாக செய்யப்படுகிறது. தி.மு.க.கூட்டணி மீது விருப்பம் இல்லாதவர்கள்கூட அந்த அணிக்கு வாக்களிக்கும் சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

 

*  விவசாயக்கடன் ..கல்விக்கடன்..ரத்து, நீட் தேர்வு ஒழிப்பு ,ஏழைகளுக்கு ரூ72,000 போன்ற  காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கிராமப் புறங்களில் மக்கள் பேசும் பொருளாகியிருக்கிறது..

 

* காஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனோபாவமே தென்படுகிறது. ஆளும் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் வீடு மற்றும் இதர சலுகைகள் கிடைக்காது என்ற ரீதியில் மக்கள் மிரட்டப்படுகின்றனர். 'ஓட்டு வாங்கும் வரை இப்படித்தான் மிரட்டுவார்கள்' என்று மக்களும் இதனை  எதார்த்தமாக  எடுத்துக்கொள்வது வியப்பு.

 

* பெரும்பாலான அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராகவே உள்ளனர். இதனால் தேர்தல்  பணிசெய்யபோகும் அவர்களுக்கு இதுவரை அஞ்சலக ஓட்டுப் படிவம் வழங்கப்படவில்லை. அப்படி வழங்காவிட்டால் தேர்தல் பணிகளில் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.

 

*  முதியோர் உதவிப்பணம் ,100 நாள் வேலைத்திட்டம்,தொய்வில்லாத இலவச அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் கிடைப்பது போன்றவை ஆளுங்கட்சி மீது பெரியளவில்  அதிருப்தி இல்லை  என்பதை அடித்தட்டு மக்களிடம் காணமுடிகிறது.அதே நேரம் மயிலாடுதுறை, நாகை தொகுதிகளிலுள்ள சுமார் 2.5 லட்சம் புதிய வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.இவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

 

*  அ.தி.மு.க.வில் பா.ம.க. இடம்பெற்றிருப்பதால் அந்த அணிக்கு கிராமத்திலுள்ள தலித் மக்களின் வாக்கு சரியும் நிலை உள்ளது.அதே நேரத்தில் வலது,இடது  கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தி.மு.க அணியில் இருப்பது இந்த அணிக்கு பலமாக உள்ளது. பெரும்பாலும் தலித் மக்கள்தான் கியூவில் நின்று வாக்களிக்கிறார்கள்

-படங்கள் : பா.பிரசன்னா