'மக்களுடனான தொடர்பு அரசியல்வாதிகளுக்கு அற்றுப் போய்விட்டது' - கமல் பேச்சு | There is no communication between people and politicians says kamal

வெளியிடப்பட்ட நேரம்: 22:32 (11/04/2019)

கடைசி தொடர்பு:22:32 (11/04/2019)

'மக்களுடனான தொடர்பு அரசியல்வாதிகளுக்கு அற்றுப் போய்விட்டது' - கமல் பேச்சு

'மக்களுடனான தொடர்பு அரசியல்வாதிகளுக்கு தற்போது அற்றுப் போய்விட்டது' என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று மயிலாடுதுறையில்  பேசினார்.

கமல்

மயிலாடுதுறை நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் மக்கள்  நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீனை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில்  கமலஹாசன் பிரசாரம் செய்து பேசினார். அப்போது "காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றை  எடுக்கும் திட்டங்களை  தடுத்து நிறுத்த வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பல நாட்களாக மக்கள் போராடுகின்றனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மண்ணில் தங்கம் கிடைத்தாலும், வைரம் கிடைத்தாலும், மண்ணை அழித்து அதனை எடுத்தாலும் பசித்தால் அவற்றை உணவாக உண்ணமுடியாது. மண்ணையும்,மக்களையும் அழித்து, மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது. மயிலாடுதுறை தொகுதி மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் என்னிடம் கூறியுள்ளனர்.

மக்களில் ஒருவராக இருக்கக்கூடிய வேட்பாளர் ரிபாயுதீன் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்றால்தான்,  மக்களின் கோரிக்கைகளை,குறைகளை தீர்க்க  முடியும். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும். ஆனால் தற்போது இருக்கிற மத்திய அரசு தமிழகத்தை கொல்லைபுறமாக மாற்ற முயற்சி செய்கிறது. இந்தியாவில் தலைவாசலாக  தமிழகத்தை மாற்றவேண்டும். ஊழலற்ற, நேர்மையான,ஆட்சி அமைய வேண்டும். நமது சின்னமான டார்ச்லைட் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதன் வெளிச்சத்தில் மக்கள் பயன்பெற்று வெளியில் வரத் துடிக்கிறார்கள்.

நான் காலதாமதமாக உங்களைச்  சந்திக்க வந்துள்ளேன். முன்பே வந்திருக்கவேண்டும்  என்று நினைக்கிறேன். மக்களுடனான தொடர்பு  அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மக்களுடனான தொடர்பு அற்று போய்விட்டது. ஆனால் நான் எப்போதும் உங்களின் ஒருவனாக இருப்பேன். மக்கள் குறைகளை போக்குவதற்கு நமது வேட்பாளர் ரிபாயுதீனுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.