மனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்! - சிதம்பரத்தில் சோகம் | Cuddalore former Death News

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (25/04/2019)

கடைசி தொடர்பு:11:13 (25/04/2019)

மனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்! - சிதம்பரத்தில் சோகம்

சிதம்பரத்தில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த விவசாயியை முதலை இழுத்துச்சென்றது. கரையில் இருந்த மனைவி, மகள்கள் கண்முன்னே இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள மேலகொண்டலப்பாடியைச் சேர்ந்தவர் ஜெயமணி (45). இவர், விவசாயத் தொழிலாளி. ஜெயமணி, நேற்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். வழியில், வல்லம்படுகை கிராமத்தின் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அவரது மனைவி மற்றும் மகள்கள் கரையில் காத்திருந்தனர்.

முதலை கடித்து இறந்த ஜெயமணி

அப்போது, ஜெயமணியை ஆற்றுக்குள் இருந்த முதலை கடித்துள்ளது. இதனால் ஜெயமணி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர், அதற்குள் முதலை அவரைத் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து படகுமூலம் தேடினார்கள். சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம்  வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இரவு விடிய விடியத் தேடி, இன்று காலை 6 மணிக்கு ஜெயமணியின் உடல்தான் மீட்கப்பட்டது.

ஆற்றில் குளிக்க இறங்கியவர், மனைவி மற்றும் மகள்கள் கண்ணெதிரே முதலை இழுத்துச்சென்று, இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


அதிகம் படித்தவை