`1500 விவசாயிகள்... கோடிக்கணக்கில் மோசடி..!'- சிக்கிக்கொண்ட சர்க்கரை ஆலை உரிமையாளர் | Cuddalore Sugar Mill Owner Arrest News

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (09/05/2019)

கடைசி தொடர்பு:11:30 (09/05/2019)

`1500 விவசாயிகள்... கோடிக்கணக்கில் மோசடி..!'- சிக்கிக்கொண்ட சர்க்கரை ஆலை உரிமையாளர்

கடலூர்  மாவட்டம், விருத்தாசலம் அருகே ஏ.சித்தூர் கிராமத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலையில் விவசாயிகளிடம் 
ரூ.80 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜன்

விருத்தாசலம் அருகே உள்ள ஏ.சித்தூர் கிராமத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்தச் சர்க்கரை ஆலையில் இப்பகுதி விவசாயிகளின் கரும்புகளை வாங்கி சர்க்கரை தயாரித்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில் இப்பகுதி விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கில் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. இந்த நிலையில் வேப்பூர் அருகே உள்ள கட்சிமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் ஸ்டாலின் (45) நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், ``2016-17ம் ஆண்டில் ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு அனுப்பிய வகையில் 6,37,500 ரூபாய் பாக்கி இருந்ததாகவும், நிர்வாகம் 1,37,500 ரூபாய் தந்துவிட்டதாவும் பாக்கியுள்ள ரூ.5 லட்சத்தை நிர்வாகம் தரவில்லை என்றும், தனது பெயரில் ஆலை நிர்வாகம் மோசடி செய்து வங்கியில் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுபோல 1500 விவசாயிகளிடம் மோசடி செய்துள்ளதாகவும், அவர்களுக்கும் கரும்பு அனுப்பிய நிலுவை தொகையையும் வழங்கப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் விவசாயிகளிடம் ரூ.80 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் இருந்த ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜனை(65) கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராம் தியாகராஜனுக்கு தஞ்சை மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளும், கடலூர் மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளும், ஒரு டிஸ்லரி கம்பெனியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.