``நாற்றுகளைச் சேதப்படுத்துறாங்க..!” - கெயில் நிறுவனத்துக்கு எதிராகப் புகார் அளித்த விவசாயிகள் | Farmers protest against gas pipes on the ground

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (15/05/2019)

கடைசி தொடர்பு:09:10 (15/05/2019)

``நாற்றுகளைச் சேதப்படுத்துறாங்க..!” - கெயில் நிறுவனத்துக்கு எதிராகப் புகார் அளித்த விவசாயிகள்

விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம்  நாற்றுகளை சேதப்படுத்தி குழாய்களைப் பதிப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் செய்துள்ளனர்.

குழாய்க்கு எதிராக விவசாயிகள் புகார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காளகஸ்தினாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை  போலீஸ் பாதுகாப்புடன் செய்து வருகிறது. சீர்காழி அருகே மாதானத்திலிருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீ. தூரம்வரை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. காளகஸ்தினாதபுரத்தில் ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டு விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் விளைநிலங்களில் நிறைய பணம் செலவு செய்து  விதைவிதைத்து நாற்றுகளைப் பராமரித்து வருகிறார்கள். அந்த நிலங்களில் ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் போன்றவற்றைக் கொண்டு செல்வதற்காக ராட்சதக்  குழாய்கள் போலீஸார் பாதுகாப்புடன் பதிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பதாகக் கூறும் விவசாயிகள் `விளைநிலங்களில் நாற்றுகளைப் பாழ்படுத்தி கெயில் நிறுவனம் செய்யும் குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என்று செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விரைவில் விவசாயிகள் ஒன்றுகூடி பெரியளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.