சிவன் - பார்வதி திருக்கல்யாண தரிசனம் | Lord shiva parvati thirukalyanam dharshana

வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (03/06/2019)

கடைசி தொடர்பு:22:05 (03/06/2019)

சிவன் - பார்வதி திருக்கல்யாண தரிசனம்

temple

நாங்கூர் மதங்கீஸ்வரர் கோயிலில் 12 சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

temple

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரைச் சுற்றி 12 வைணவ ஆலயங்களும் 12 சிவாலயங்களும் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை  12 வைணவ ஆலயங்களிலிருந்து பெருமாள் வீதிவலம் வந்து, நாங்கூரில் ஒரே இடத்தில் காட்சி தரும் கருடசேவை நடைபெறும். அதுபோல் 12 சிவாலயங்களிலிருந்து சிவன் - பார்வதி வலம் வந்து நாங்கூரில் ஒரே இடத்தில் காட்சி தரும் திருக்கல்யாணம் வைபவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நாங்கூரிலுள்ள மதங்கீஸ்வரர், அமிர்தபுரீஸ்வரர், ஆரண்யேஸ்வரர், நம்புவார்க்கன்பர், கைலாசநாதர், யோகநாதர் ஆகியோருடன் காத்திருப்பு சொர்ணபுரீசுவரர், திருமேனிக்கூடம் சுந்தரேசுவரர், பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர், அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர் முதலிய 12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியர்களுடன் மதங்கீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர்.

 

temple

 

இதுகுறித்து நாகராஜ குருக்களிடம் பேசியபோது, "இங்கு வருகை தரும் அனைத்துப் பெருமான்களுக்கும் மேளதாளத்துடன் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். மாலையில் சுவாமி - அம்பாள்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒரே பந்தலில் எழுந்தருள செய்து திருக்கல்யாணம் நடத்தி வைத்துள்ளோம். இன்றிரவு நந்திதேவருக்கு சிவபெருமான்கள் காட்சி கொடுக்கும் ரிஷபாரூட சேவையும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் 12 சிவன் - பார்வதி திருக்கலயாண வைபவ தரிசனம் செய்வது கோடி புண்ணியமாகும். இத்தகைய தரிசனம் செய்வோர்க்கு  நவகிரக தோஷ நிவர்த்தி ஆவதோடு திருமண தடைகள் அகலும். எனவே, இந்நாளில் பக்தர்கள் வழிபாடு செய்து ஈசன் அருள் பெற வேண்டுகிறோம்" என்றார்.