வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (11/10/2013)

கடைசி தொடர்பு:19:37 (11/10/2013)

எலிக்கு வைத்த மிக்சரை சாப்பிட்ட அண்ணன் பலி: தம்பி உயிருக்கு போராட்டம்!

செங்கல்பட்டு: எலியை கொல்வதற்காக கடையில் வைத்திருந்த மிக்சரை சாப்பிட்டு அண்ணன் பலியானதும், தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதும் பூதூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் சாலையில் உள்ளது பூதூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் நடராஜ் என்பவர், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது மகன்களான கிருபாகரன் (8), அன்பு செல்வன் (3) ஆகியே இருவரையும் அழைத்து கொண்டு கடைக்கு சென்றிருக்கிறார். தன்னுடன் வந்த பிள்ளைகள் திண்பண்டம் கேட்டுள்ளனர். அதற்கு நடராஜ், மிக்சரை வாங்கி பிள்ளைகளிடம் கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் கிருபாகரனும், அன்பு செல்வனும் மிக்சரை சாப்பிட்டிருக்கின்றனர். மிக்சரை சாப்பிட்ட ஒரு மணிநேரம் கழித்து இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருபாகரன் பலியாக, அன்பு செல்வன் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

மருத்துவர் ஒருவர் கூறும்போது, ''விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்தோ அல்லது எலிமருந்தோ சாப்பிட்ட அறிகுறி தான் தெரிகின்றது. தற்போது, அன்பு செல்வன் உயிரும் ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றான்" என்றார்.

நடராஜ் உறவினர்கள் நம்மிடம் கூறும்போது, ''கடையில் உள்ள எலியை பிடிப்பதற்க்காக கடைக்காரர் மிக்சரில் எலி மருந்தை கலந்து வைத்திருந்திருக்கிறார். அது தெரியாமல் அந்த கடைக்காரரின் மனைவி கவனக்குறைவாக அந்த மிக்சரை கொடுத்ததுதான் இதற்கு காரணம்” என்றார்கள்.

செய்தி, படங்கள்:
பா.ஜெயவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்