வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (25/11/2013)

கடைசி தொடர்பு:19:33 (25/11/2013)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய தங்க தேர்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு 2 கோடி ரூபாய் செலவில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். இங்கு, ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்களில் 7 ஆம் நாளன்று சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்கத் தேரில் வீதி உலா வருவது வழக்கம். தற்பொழுது சுவாமி எழுந்தருளும் தேர், சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இதனால், உபயதாரர் நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் செலவில் தற்போது புதிய தங்கத் தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சிவன் கோவிலில் நடைபெற்று வரும் இந்த பணியில், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏ.ஆர்.சி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் ஈடுபட்ட்டுள்ளனர். பழைய தேரின் அமைப்பு, உயரம், அகலம் மற்றும் பாரம்பரியம் மாறாத வகையில், 8.75 அடி உயரமும், 8.25 அடி அகலம் உள்ள புதிய தங்கத் தேர் தயாராகி வருகிறது.

இந்த புதிய தங்கத் தேர், 200 கிலோ செம்பு, 50 கிலோ பித்தளை, 6 கிலோ தங்கம் மற்றும் 2.5 டன் பர்மா தேக்குகளால் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை இன்று பார்வையிட்ட கோவில் தக்கார் மணிகண்டன், வரும் மாசித் திருவிழா 7 ஆம் நாளில் புதிய தங்க தேரில் சண்முகர் வீதி உலா வருவார் என தெரிவித்தார்.

இ.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்