வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (17/12/2013)

கடைசி தொடர்பு:13:12 (17/12/2013)

ஆருத்ரா தரிசனம்: உத்ரகோசமங்கை மரகத நடராஜர் சிலைக்கு அபிஷேகம்!

ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உத்ரகோசமங்கை மரகதநடராஜர் சிலை சந்தனகாப்பு கலையப்பட்டு அபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் உத்ரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மெல்லிய தன்மை கொண்ட மரகத கல்லினால் ஆன சிலை என்பதால் சிறு அதிர்வு ஏற்பட்டால் கூட சிலைக்கு சேதம் ஏற்பட்டுவிடும். இதனால் ஆண்டு முழுவதும் சந்தகாப்பினால் பூசப்பட்டிருக்கும் மரகத நடராஜரின் சிலையானது ஆண்டுக்கு ஒரு முறை  திருவாதரை தினத்தில் சந்தனம் கலையப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும்.

அதன்படி, திருவாதரை தினமான இன்று காலை மரகத நடராஜரின் சந்தனம் கலையப்பட்டது. அதனை தொடர்ந்து 11 மணியளவில் நடராஜருக்கு சந்தனாதி, கஸ்தூரி தைலங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 32 வகையான வாசனை திரவியங்களால்  அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் உத்ரகோசமங்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று இரவு ஆருத்ரா தரிசனம் நடைபெற்று அதன் பின் மகா அபிஷேகம் நடக்க உள்ளது. அதன்பின் மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு பூசப்படும்.

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கோயிலின் ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், நிர்வாக அதிகாரி சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

இரா.மோகன்

படம்:
உ.பாண்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்