கோவையில் அழகி போட்டி நடத்த மாதர் சங்கம் எதிர்ப்பு!

கோவை: கோவை, அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் தென்னிந்திய அழகி போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் இன்று மாலை தென்னிந்திய அழகி போட்டி நடத்த கேரளாவை சேர்ந்த பெதர்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஓன்று ஏற்பாடு செய்து இருந்தது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அழகிகள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரோட்டரி கிளப்பிற்கு நிதி திரட்டுவதற்காக இந்த அழகி போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அழகி போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் இன்று பிற்பகல் நட்சத்திர விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் கோவையில், அழகி போட்டிகள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவங்களுக்காக பெண்களை காட்சி பொருளாக நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனவும், உடனடியாக அழகி போட்டியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி முழக்கமிட்டனர். நட்சத்திர விடுதிக்குள் நுழைய முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாதர்சங்க நிர்வாகிகளுடன் நட்சத்திர விடுதி பொது மேலாளர் ராமசந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அழகி போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், அழகி போட்டி நிகழ்ச்சியை அந்த தனியார் நிறுவனமும் ரத்து செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாதர் சங்கம் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து நட்சத்திர விடுதி முன்பாக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ச.ஜெ.ரவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!