ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் அன்வர்ராஜா!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அன்வர்ராஜா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா போட்டியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அன்வர் ராஜா,  இன்று தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமாரிடம் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சுந்தர்ராஜன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் முனியசாமி, வாரிய தலைவர் ஜி.முனியசாமி, அறந்தாங்கி எம்.எல்.ஏ ராஜநாயகம் ஆகியோர் உடனிருந்தனர். மாற்று வேட்பாளராக அன்வர்ராஜாவின் மகன் முகம்மதுகான் ராஜா மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இரு வாகனங்களில் வேட்பாளர் அன்வர்ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்பவருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி உண்டு. ஆனால் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தின் முன்பு போலீஸார் யாரும் இல்லாததால் அன்வர்ராஜாவுடன் வந்த அனைவரும் தேர்தல் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தனர். இதனை கண்ட தேர்தல் அதிகாரி நந்தகுமார் 5 பேரை தவிர மற்றவர்கள் வெளியே செல்லுமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதன் பின்னரே அன்வர்ராஜவின் வேட்புமனு பெறப்பட்டது.

இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!