காதலித்து ஏமாற்றியதால் துண்டுதுண்டாக வெட்டிக்கொன்றேன்: கைதான காதலன் வாக்குமூலம்

சென்னை: காதலித்து ஏமாற்றியதால் ரேகாவை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்தேன் என்று கைதான காதலன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை ரேகா (25), கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரும்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேகா, கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இது பற்றி ஸ்ரீராம் காவல்துறையில் புகார் செய்தார்.

இந்நிலையில் 3ஆம் தேதி போரூர் ஏரியில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அதனை கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாயமான ரேகாவின் உடல் என்பது தெரியவந்தது. கை கால்களை துண்டு துண்டாக வெட்டி அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் இது குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், ரேகாவை ஒரு தலையாக காதலித்த மாதவரத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்சன் இக்கொலையை செய்திருப்பதை கண்டுபிடித்தனர். தலைமறைவான சாம்சனை மாதவரத்தில் நேற்றிரவு கைது செய்தனர்.

ரேகாவை கொலை செய்தது ஏன் என்பது குறித்து சாம்சன் அளித்துள்ள வாக்குமூலத்தில், "ரேகா முன்பு பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு ஊழியர்களை ஏற்றி வரும் வேன் டிரைவராக நான் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கும் ரேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் நாங்கள் சுற்றி திரிந்தோம். பின்னர் என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். ஸ்ரீராமை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். என்னை காதலித்து ஏமாற்றியதால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன்.

கல்யாணம் முடிந்த பின்னர் 2 மாதம் என்னுடன் ரேகா பேசவில்லை. அதற்பிறகு என்னுடன் பேசி மீண்டும் பழக ஆரம்பித்தார். ஆனால் எனக்கு அவள் மீதான ஆத்திரம் தணியவில்லை. அதனால் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று செல்போனில் பேசி அவரை வரவழைத்தேன். காரில் பீச்சுக்கு அழைத்துச் சென்றேன். அன்று மாலை மாதவரம் பகுதிக்கு சென்றேன். ஆள் இல்லாத இடத்தில் வைத்து காரிலேயே அவளது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

பின்னர் மாதவரம் காலி மைதானம் ஒன்றில் வைத்து அவளது கை மற்றும் 2 கால்களை வெட்டி துண்டாக்கினேன். ஏற்கனவே கொண்டு வந்து இருந்த கோணிப் பையில் உடலை மூட்டையாக கட்டி போரூர் ஏரியில் வீசினேன். பின்னர் காரை எனது நண்பர் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!