108 ஆம்புலன்ஸ் வராததால் மரணம் அடைந்த புதுச்சேரி வாலிபர்! | 108 ambulance Did not Pondicherry young men died

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (30/06/2014)

கடைசி தொடர்பு:16:06 (30/06/2014)

108 ஆம்புலன்ஸ் வராததால் மரணம் அடைந்த புதுச்சேரி வாலிபர்!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலமாக வீசிய சூறைக்காற்றில் அறுந்த விழுந்த மின்சார வயரை மிதித்த 24 வயது இளைஞர் உயிர் இழந்தார். 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் வாலிபர் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று மிதமான காற்று அடித்துக் கொண்டிருந்தது. இரவு 7 மணிக்குமேல் அது மேலும் வலுப்பெற்று சூறைக்காற்றாக மாறி பலமாக வீசத் தொடங்கியது. இரவு 7.30 மணியிலிருந்து புதுச்சேரி முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிரதான சாலையான அண்ணா சாலையில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் அருகே மின்சார வயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து கிடந்தது.

அதில் மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருக்க இரவு 8 மணியளவில் அந்த பகுதி வழியாக வந்த விஷ்ணுபதி அதை மிதித்துள்ளார். அப்போது தூக்கி வீசப்பட்ட விஷ்ணுபதியை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விஷ்ணுபதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வராதததால் வேறொரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விஷ்ணுபதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே விஷ்ணுபதி இறந்துவிட்டார்.

சம்பவம் குறித்து புகார் தெரிவித்து பல மணி நேரமாகியும், தன்வந்தரி நகர் காவல் நிலையத்தில் ஒருவர் கூட வரவில்லை என்று வேதனைப்பட்டனர் சம்பவத்தை நேரில் கண்டவர்கள்.

நா.இள.அறவாழி 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்