நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Anne terottam Nellaiappar Temple: Thousands of devotees participation

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (10/07/2014)

கடைசி தொடர்பு:17:37 (10/07/2014)

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆனித் தேரோட்ட விழா, விமரிசையாக நடந்தேறியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2ஆம் தேதி கடக லக்னத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா. முதல் நாள், இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். 2ஆம் நாள், காலையில் வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி வீதி உலா வர‌, அம்பிகையும் வெள்ளி சப்பரத்தில்  திருவீதி உலா வந்தார். இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச  வாகனத்தில் வீதியுலா வந்தார். அவருடன் காந்திமதி அன்னையும் வெள்ளிக் கமல வாகனத்தில் திருவீதியுலா வந்தது கண் கொள்ளாக் காட்சி.

3ஆம் நாள், இரவில் சுவாமி தங்க பூத வாகனத்தில் திருவீதியுலா வந்தார். காந்திமதி கருணை விழிகளில் பார்த்தபடி, வெள்ளி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார். 4ஆம் நாள் காலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் நெல்லையப்பரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாளும் திருவீதியுலா வந்தார்கள். இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வந்தார்கள். அதையடுத்து காலையில் அதே வெள்ளி ரிஷப வாகனத்தில் நடைபெற்றது திருவீதியுலா அன்று இரவு 8 மணி அளவில் இந்திர விமானத்தில் திருவீதி உலா வருவதைக் கண்டு சிலிர்த்துப் போனார்கள் பக்தர்கள்.

6ஆம் நாள், காலையும், மாலையும் வெள்ளி சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 7ஆம் நாள் காலை 8 மணிக்கு சுவாமி தந்தப் பல்லக்கில் வீதியுலா வந்தார். அருள் மழை பொழிந்தபடி தன் முத்துப்பல் காட்டிச் சிரித்தபடி, முத்துப் பல்லக்கில் வீதியுலா வந்தார் காந்திமதி அம்பாள். அன்று இரவு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திரு வீதி உலா வந்தனர். பின்பு 8ஆம் நாள் காலை  நடராஜப் பெருமான்  எழுந்தருளல் நடைபெற்றது. உட்பிராகாரத்தில் உலா வருதல் நிகழ்ச்சியும் இரவில் பச்சை சாத்தியும்  எழுந்தருளினார்.

மறுநாள் (9ஆம் நாள்) காலை  காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்ப சுவாமி திருத்தேரில் கம்பீரமாக அமர்ந்து வர, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, திருத்தேரோட்டம் சிறப்புற நடைபெற்றது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வர, நான்கு மாடவீதிகளிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், ஹரஹர மகாதேவா என்றும் நமசிவாயம் என்றும் கோஷங்களை எழுப்பி பரவசமானார்கள்.

விழாவில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருத்தேரோட்ட வைபவத்தையோட்டி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை முதலான பகுதிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்து கொண்டு, தேரோட்டத்தைக் கண்டு சிலிர்த்தனர் பக்தர்கள். ஆனித் தேரோட்ட வைபவத்தின் நிறைவுநாளான, நாளை தீர்த்தவாரி நடைபெறுகிறது.

படங்கள்: எல்.ராஜேந்திரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்