முஷ்டி முறுக்கும் வாசன் - சிதம்பரம் ஆதரவாளர்கள்!

புதுக்கோட்டை: வாசன் அணியினரும், ப.சிதம்பரம் அணியினரும் புதுக்கோட்டையில்  முஷ்டி முறுக்கி வருகின்றனர்.

அண்மையில் காங்கிரசில் இருந்து விலகுவதாக வாசன் அறிவித்தது முதலே தமிழகத்தில் உள்ள காங்கிரசின் மற்ற கோஷ்டி தலைவர்கள் தங்களது பலத்தை நிரூபிக்க தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் பிரச்னை இருந்தும் இன்னும் கூட்டங்கள் நடத்துவது மட்டும் குறைந்தபாடில்லை.

ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் மூப்பனாருக்கென தனி செல்வாக்கு இருந்தது. அதை வைத்து தான் கடந்த 96 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் துவக்கினார். பல்வேறு அரசியல் காரணங்களால் அது காங்கிரஸோடு இணைந்து இன்று மீண்டும் தனிக்கட்சி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஞானதேசிகனின் தலைவர் பதவி போன பிறகு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடங்கி ப.சிதம்பரம் வரை தங்களது செல்வாக்கை நிரூபிக்க  பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் மற்றும் வாசன் தரப்பில் கூட்டங்கள் நடந்தாலும், புதுக்கோட்டையில் நடந்த கூட்டம் மட்டும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.

காரணம், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸை பொறுத்த வரை, மூப்பனாரின் ஆதரவாளர்களாய் இருந்த பலரையும் சிதம்பரத்தின் கவனிப்பு அவர் பக்கம் திருப்பியது. மாவட்ட தலைவராய் வலம் வந்த மூப்பனாரின் ஆதரவாளர் புஷ்பராஜ் ப.சி. பக்கம் சாய்ந்தார். போதாக் குறைக்கு திருமயம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராம சுப்புராம். இவர்தான் சிதம்பரத்திற்கு வலதுகரம். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் கிராமங்களில் வங்கிகளை திறப்பது, ஏ.டி.எம். மையங்களை திறப்பது, கிராமங்களில் நடைபெறும் காதணி விழாக்களில்கூட சிதம்பரத்தை கலந்துகொள்ள வைப்பது என அதிரடிகளை அரங்கேற்றி வந்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் காங்கிரஸ் தரப்பில் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். அதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் கூடிய கூட்டத்தை பார்த்த இவர்கள் இருவரும் அப்போதே அப்செட் ஆகி இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் வாசன் அணியினர் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள்.

சாருபாலா தொண்டைமான் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை பார்த்த சிதம்பரம் தரப்பு அதிர்ந்து போயிருக்கிறது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வருகின்ற 28 ஆம் தேதி திருச்சியில் வாசன் நடத்த இருக்கும் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என பேசி இருக்கிறார்கள்.

செய்தி, படங்கள்: வீ.மாணிக்கவாசகம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!