வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (03/12/2014)

கடைசி தொடர்பு:19:24 (03/12/2014)

வால்பாறையில் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை தாக்க முயன்ற சிறுத்தை!

கோவை: வால்பாறை பகுதி மக்களை மிரட்டி வரும் சிறுத்தை, இன்று அங்குள்ள அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களை தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக மாணவிகள் தப்பினர்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் எல்லையோர ஊர்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைவதும், அது சார்ந்த பிரச்சினைகளும் சமீபகாலத்தில் அதிகரித்துவிட்டது. தேயிலைத் தோட்ட குடியிருப்புகள், ரேஷன் கடை, மருத்துவமனை, பள்ளிக்கூடம் என சிறுத்தைகள் நுழையாத இடமே இல்லை. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சிறுத்தை நுழையும் என்பதுதான் வால்பாறையின் இப்போதைய நிலை.

இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டி அமைந்துள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட பகுதியில் துவக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பள்ளியைச் சுற்றி பாதுகாப்புக்காக முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கம் போல  மதிய உணவுக்குப்பின் மாணவிகள் சிலர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை, முள் வேலியை தாண்டி பள்ளி வளாகத்தில் நுழைந்திருக்கிறது.

அப்போது அங்கிருந்த மாணவிகளை நோக்கி உறுமிய சிறுத்தை, அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளது. சிறுத்தை தங்களை நோக்கி வருவதை கண்ட மாணவிகள், அச்சத்தில் கூச்சலிட்டனர். 30க்கும் அதிகமான மாணவிகள் ஒரே நேரத்தில் கூச்சலிட்டதால், சிறுத்தை அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறியது. மாணவிகள் சத்தம் கேட்ட ஆசிரியர்கள் அங்கு வந்து, பத்திரமாக வகுப்புக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். தப்பியோடிய சிறுத்தை, அந்த பகுதியில் பதுங்கியுள்ளதா என தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை.

பகல் நேரத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த சிறுத்தை, மாணவிகளை தாக்க முயன்ற சம்பவம் அங்கு வாழும் மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்