கோரிகைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

கடலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாற்றுத்திறனாளிகள்  கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.

அப்போது  மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் ஜான்சிராணி கூறுகையில்,  "தமிழகத்தில் குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு கூட இல்லாமல் பெருமளவில் மாற்றுதிறனாளிகள் தவிக்கின்றனர். கெளரவத்தை விட்டு கையேந்தி வாழவேண்டிய அவலத்தை ஏராளமான மாற்றுதிறனாளிகள் சந்திக்கின்றனர்.

உடலின் எல்லா பாகங்களும் நல்ல நிலையில் உள்ள சாதாரண மனிதனைவிட,  ஒவ்வொரு தேவைக்கும் கூடுதலான செலவை மாற்றுத்திறனாளிகள் செய்யவேண்டியுள்ளது. இவர்களைச் சுமந்து தவிக்கும் குடும்பத்தினரும்  வாழ்நாள் துயரத்தில் உள்ளனர். ஆனால் மாநில அரசு மட்டும் கவலைப்படுவதாக இல்லை.


எனவே,  சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட உதவிதொகையை அவர்கள் துறை மூலமாகவே, அடையாள சான்று கொடுக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து உதவிதொகையை தமிழக அரசு  வழங்கவேண்டும்.

சட்ட விரோத கடும் விதிமுறைகளை ரத்து செய்யவேண்டும். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் தனியார் பேருந்துகளில் 50 சவீத கட்டண சலுகை அளித்திடவேண்டும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து, மாதம் ஒருமுறை குறை கேட்பு கூட்டம் நடத்தவேண்டும், மாற்றுத்திறனாளிக்கான பள்ளிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் கண்காணித்து, சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்றார்.


- க.பூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!