வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:04 (15/05/2017)

கொள்ளிடத்தில் மணல் அள்ள எதிர்ப்பு... அரசு பேருந்து சிறைபிடிப்பு!

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து நத்தம் கிராம மக்கள் 2 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. இதற்கு எதிராக பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. மேலும், மணல் அள்ளும் லாரிகள் அதிவேகமாக பயணிப்பதாகவும், கிராம மக்கள் விபத்துக்குள்ளாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து எதிர்ப்பு நடவடிக்கையாக மணல் குவாரியை முற்றுகையிட்டுள்ளனர் நத்தம் கிராம மக்கள்.

இன்று கொள்ளிடம் ஆற்றில் மணல் லாரிகள் வந்து செல்லும் பாதையை அவர்கள் முற்றுகையிட்டனர். இதில் மணல் அள்ள வந்த பல லாரிகள் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், இரண்டு அரசுப் பேருந்துகளையும் செல்ல விடாமல் கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். 1 மணி நேரத்துக்கும் மேலாக கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.