வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (27/06/2017)

கடைசி தொடர்பு:08:27 (27/06/2017)

கனமழை எதிரொலி: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

rain

தொடர் மழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில், மழை தீவிரமடைந்துள்ளது. கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட இரணியல், குளித்துறை, தக்கலை, குளச்சல் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதையடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

தொடர்ந்து, கன்னியாகுமரி சுற்றுலா படகுச் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.