Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது ஊருக்காக உழைக்கும் ஓய்வுபெற்ற அதிகாரியின் கதை!

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நல்லாவூரில் ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளர் ஜெயமணி ஆன்மிகத்தோடு, சமூக சேவைசெய்து ஏழைகளின் ரட்சகனாகத் திகழ்கிறார். நல்லாவூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சிவனும், விஷ்ணுவும் இணைந்த பசுபதீஸ்வரர் கோயில் பாழடைந்துகிடப்பது ஜெயமணி பார்வையில்பட்டது. உரிய அனுமதிபெற்று தனது சொந்த செலவில் ரூ.25 லட்சம் செலவுசெய்து கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார். சீரடி சாய்பாபா பக்தரான ஜெயமணிக்கு, சென்னை சிற்பக்கூடம் ஒன்றில் சாய்பாபா சிலையைப் பார்த்ததும், பட்டென மனதுக்குப் பிடித்துவிட்டது. அதனால், சொந்த ஊரில் சாய்பாபா கோயிலைக் கட்டவேண்டும் என்று எண்ணி, ஏழு லட்சம் ரூபாய் செலவுசெய்து உடனே வாங்கி ஊருக்குக் கொண்டுவந்துவிட்டார். அதை எங்கே வைப்பது என்று திகைத்துப்போனவர், உறவினர் ஒருவரிடம் சிறிய இடம் ஒன்றைக் கேட்க, அவரோ மறுக்காமல் ஓர் ஏக்கர் நிலத்தைக் கொடுத்துவிட்டார். அதில், கோயிலைக் கட்டி வணங்க... பக்தர்களின் வேண்டுகோளும் உடனுக்குடன் நிறைவேற அங்கு நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்துவிட்டது.

 

தினமும் இரவில் அன்னதானமும், வியாழக்கிமைதோறும் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்களுக்குத் தலைவாழை இலைபோட்டு வயிறார மதிய உணவு படைக்கிறார். அதன் அருகில் தியான மண்டபம் கட்டி யோகா, தியானம், மனவள மற்றும் காயகல்ப பயிற்சிகளுடன், தையல் இயந்திரங்கள் வாங்கி ஏழைகள் மற்றும் விதவைப் பெண்களுக்குத் தையல் பயிற்சியும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை அவரே நேரடியாகப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செலுத்துகிறார். கிராமப்புற மாணவர்களும் கம்யூட்டர் கல்வி கற்றுக்கொள்ள கணினியுடன் இன்டர்நெட் வசதியும் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார். திடீரென விபத்தில் சிக்கி சிகிச்சை செலவுக்காகச் சிரமப்படுபவர்களுக்கு மருத்துவக் கட்டணத்தையும் ஜெயமணியே கட்டுகிறார். உதவியென்று வரும் எவரையும் உதாசீனப்படுத்தாமல் இன்முகத்தோடு வாரிவழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார்.  

 

ஜெயமணி

 

58 வயதில் ஓய்வுபெற்று, தற்போது 88 வயதிலும் சுறுசுறுப்பான இளைஞராய், சமூகச் சேவகராய் ஜெயமணியால் எப்படி விளங்க முடிகிறது? அவரை நேரில் சந்தித்தோம். ''இது எங்க பூர்வீக கிராமம்.  விவசாயக் குடும்பம். கூரைவீட்டுலதான் வசிச்சோம். எட்டாம் வகுப்பு வரைக்கும் நானும் எங்க அண்ணனும் அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். தெருவிளக்குலதான் படிப்பு. அதன்பிறகு தினமும் கும்பகோணம் போய்வருவது தூரம் என்பதால், அங்கேயே மூணு ரூபாய்க்குக் குடிசைவீட்டை வாடகைக்கு எடுத்து நானும் அண்ணனும் தங்கி காலேஜ் வரைக்கும் படிச்சோம். ஒருவேளை சமைத்து, மூணுவேளை சாப்பிடுவோம். அண்ணன் ஆசிரியர் வேலைக்குப் போய் ஓய்வுபெற்று 90 வயதில் நலமுடன் இருக்கிறார். நான் இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் இன்ஜினீயர் முடித்து இந்தியா முழுவதும் பணிசெய்து ஓய்வுபெற்றேன். எனது மகன் திருப்பூரில் கண் மருத்துவராகவும், இன்னொரு மகன் சென்னையில் இன்ஜினீயராகவும் இருக்கிறார்கள். மகள், மாப்பிள்ளையுடன் துபாயில் வசதியாக வாழ்கிறார். எனது ஓய்வூதியம் ரூ.85 ஆயிரத்தோடு, குடும்ப உறுப்பினர்கள் தரும் பணத்தையும் சேர்த்து என்னால் இயன்ற சிறு உதவிகளை இந்த ஊர்மக்களுக்குச் செய்துவருகிறேன். சிவன் கோயிலைக் கும்பாபிஷேகம் செய்ததோடு... அதற்கு நித்திய பூஜைகள் செய்ய மாதச் சம்பளத்துக்கு குருக்களை நியமித்து இருக்கிறேன். எங்கள் குடும்பமே சாய்பாபா பக்தர்கள் என்பதால், சாய்பாபாமூலம் எங்களுக்குக் கிடைத்த நிறைவான வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கே சாய்பாபா கோயிலைக் கட்டினோம். இந்த சாய்பாபா கோயிலில் வந்து வணங்கும் பக்தர்களின் பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறுவதாகச் சொல்லும்போது உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். எல்லாமே பாபாவின் கருணைதான். நாலுபேருக்கு உதவிசெய்வது என்பது மிகவும் மகிழ்ச்சியா இருக்குது'' என்றார்.

                      

  நல்லாவூரில் ஜெயமணி இருப்பதுபோல, எல்லா ஊர்களிலும் ஒரு ஜெயமணி இருந்தால் நாடு நல்லாத்தான் இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement