Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு எதிராக விரைவில் போராட்டம் அறிவிப்பு – திருமாவளவன்

காவிரி கடைமடை பகுதிகளான நாகை, கடலூர் மாவட்டங்களிலுள்ள 45 கிராமங்களில், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்போவதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன.  இத்திட்டம் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், 'நிலத்தடி நீர் கெட்டுப்போவதோடு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் அபாயமும் உருவாகும்' என மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தப் பகுதி மக்களிடையே கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்திய பா.ம.க இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி, 'விரைவில் இத்திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தங்கள் கட்சி நடத்தும்' என்றும் அறிவித்துள்ளார்.   

 

திருமாவளவன்

 

இந்நிலையில், நேற்று (08-08-2017) சீர்காழி அருகே பழையபாளையம், மாதானம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்கள் கருத்துகளைக் கேட்டறிந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், சின்னப்பெருந்தோட்டம் கிராமத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசியபோது, “தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.  இந்த மண்டலம் அமைவதற்கு சுமார் 92 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும், அதில் முதற்கட்டமாக ரயில்வே பாதைகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்போவதாகவும் தெரியவருகிறது. அதைத்தொடர்ந்து மாநில அரசு 57,500 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும். அதன்பின், சில கிராமங்களை முற்றிலும் அப்புறப்படுத்தி தொழிற்சாலைக்கான தளவாடப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான இடமாக மாற்றுவார்கள். மேலும், கச்சா எண்ணெயை சேகரிக்க ஏதுவாக பெரிய உலைகள் அமைப்பார்கள். இதன் காரணமாகப் பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகள் அகற்றப்படுவதுடன், விளைநிலங்களும் முற்றிலும் பாதிக்கப்படும். இதுவரை காவிரி டெல்டா, வேளாண் மண்டலமாக இருந்து வந்தது. காவிரிப்படுகையில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் இயற்கை வளங்களையெல்லாம் (கச்சா எண்ணெய், மீத்தேன், ஹைட்ரோ கார்பன்) எடுப்பதற்கு பூமிக்கடியில் ரசாயனக் கலவைகளைச் செலுத்தி, கெமிக்கல் மண்டலமாக மாற்றிவிட்டார்கள். இனிவரும் காலங்களில் நாகை, கடலூர் மாவட்டங்களும் இதுபோன்று கெமிக்கல் மண்டலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைமுறையினர் இந்தப் பகுதியில் வாழவே முடியாது. இயற்கை எழில்மிகு 'சின்னப்பெருந்தோட்டம்' போன்ற விவசாயக் கிராமங்கள் இருந்ததாக அடுத்துவரும் தலைமுறையினர் சொல்லித் தெரிந்துகொள்ளும் அவலநிலைதான் உருவாகும். இந்தப் பகுதியிலுள்ள செழுமையான இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ரசாயனப் பூங்காவாக மாற்ற இரண்டு அரசுகளும் திட்டமிட்டு வருகின்றன. இயற்கை வளங்களை அழிக்காமல், மக்களை அப்புறப்படுத்தாமல், விவசாயத்தைப் பாழ் படுத்தாமல், எரிவாயு எடுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அதைப் பின்பற்றாமல், நெற்களஞ்சியமாகத் திகழும் டெல்டாவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் மக்கள் நெடுவாசல், கதிராமங்கலம் போல் கடும் கொந்தளிப்புடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களிலும் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர் தோழமைக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நாகை, கடலூரில் தலா ஒரு ஊரைத் தேர்வு செய்து மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement