Published:Updated:

ஏமாறாதே... ஏமாறாதே! மோசடிக்கு மூலதனமாகும் `தேசபக்தி' உஷாரகிக்கிடுங்க மக்களே!

உஷார் மக்களே...
News
உஷார் மக்களே...

நாம் எதிலெல்லாம் பதறுவோமோ... அதெல்லாம்தான் அவர்களுக்குச் சாதகம். அந்தக் கணநேர பதற்றத்தில் பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கிறது. இன்னும் போகப்போக என்னவெல்லாம் காரணங்களைக் கண்டுபிடிப்பார்களோ தெரியாது. முடிஞ்சா இவரைப் போல எல்லாரும் உஷாராகிக்கிடுங்க மக்கா!

ஏமாறாதே... ஏமாறாதே! மோசடிக்கு மூலதனமாகும் `தேசபக்தி' உஷாரகிக்கிடுங்க மக்களே!

நாம் எதிலெல்லாம் பதறுவோமோ... அதெல்லாம்தான் அவர்களுக்குச் சாதகம். அந்தக் கணநேர பதற்றத்தில் பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கிறது. இன்னும் போகப்போக என்னவெல்லாம் காரணங்களைக் கண்டுபிடிப்பார்களோ தெரியாது. முடிஞ்சா இவரைப் போல எல்லாரும் உஷாராகிக்கிடுங்க மக்கா!

Published:Updated:
உஷார் மக்களே...
News
உஷார் மக்களே...

தினுசு தினுசாக ஏமாற்றுபவர்களைப் பார்த்து, ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?' என்று நக்கலாகச் சொல்வார் 'வைகைப் புயல்' வடிவேலு. ஆனால், நம் மக்கள் ஏமாறும் வேகத்தைப் பார்த்தால், அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ரூம்போட்டு யோசிக்கவே தேவையில்லை. பின்னே... 'மொட்டை அடிங்க... மொட்டை அடிங்க' என்று பாக்கெட்டையும் பேங்க் அக்கவுன்ட்டையும் திறந்துவைத்துக் கொண்டல்லவா மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்!

அதேசமயம், இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை,'உண்மையிலேயே, நல்ல மூளைக்காரங்கடா' என்று சபாஷ் போட்டுத் தட்டிக்கொடுக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது. இந்த மூளையையெல்லாம் நாட்டுக்காக உபயோகித்தால், இந்நேரம் அப்துல் கலாமின் '2020 வல்லரசு கனவு' எப்போதோ நிறைவேறியிருக்கும். நம்நேரம், நாட்டிலிருக்கிற மக்களில் வெகுபேருடைய நிம்மதியைத்தான் பறித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த 'மூளைக்காரய்ங்க''.

மக்களே உஷார்...
மக்களே உஷார்...

ரேஷனுடன் ஆதார் கார்டை இணைக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டால், அது மூளைக்காரய்ங்களுக்குச் சாதகமே. மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் அறைகூவல் விடுத்தால், அதுவும் அவர்களுக்குத்தான் சாதகம்.

ஆன்லைனில் பெண் பார்த்தால், கார் வாங்க நினைத்தால், கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டால், மின்கட்டணத்தைக் கட்ட மறந்தால், போன் ரீசார்ஜ் செய்தால், வாடகைக்கு வீடு தேடினால், ரயிலுக்கு டிக்கெட் புக் செய்தால், கல்யாண சாப்பாட்டுக்கு சமையல்காரரைப் பார்த்தால்... இப்படி விடிந்தால் பொழுதுபோனால் நாம் என்ன செய்தாலும் அதை வைத்து ஒரு காரணத்தோடு நம் மொபைலுக்குள் புகுந்து கலாட்டா செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். காலையில் எழுந்ததும் பாத்ரூம் வரவில்லை என்று யோசிக்கக்கூட பயமாக இருக்கிறது. 'எங்கே நம்ம மைன்ட் வாய்ஸ் மூளைக்காரய்ங்களுக்குக் கேட்டு, அதையும் ஒரு காரணமாக்கிக் கொண்டு வந்துவிடுவார்களோ' என்கிற பதற்றத்துக்குப் பஞ்சமில்லை.

சமீபத்தில் இப்படித்தான் நம் அலுவலக நண்பரின் மகன், இத்தகைய ஆன்லைன் மோசடி பேர்வழிகளிடம் சிக்கியிருக்கிறார். ஆனால், சற்றே யோசித்ததால் மயிரிழையில் உஷாராகித் தப்பிவிட்டார். அவருடைய அனுபவம் நமக்கும், நம் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் கைகொடுக்கலாம்.

 சென்னையில் வசிக்கிறார் நண்பரின் மகன். அவர் சமீபத்தில் புதிதாக ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலேயே ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அவர், புதிதாக வாங்கிய வீட்டை வாடகைக்கு விடுவதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். அடுத்த நாளே ஒரு போன். 'ஹலோ நான் ராணுவத்தில் மேஜர் பதவியில் இருக்கிறேன். இப்போது, ஹைதராபாத்திலிருக்கும் எனக்கு, சென்னைக்கு பணிமாறுதல் தந்துள்ளனர். வாடகைக்கு வீடு தேடிவருகிறேன். உங்களுடைய வீடு வாடகைக்கு விடுவதாக ஆன்லைனில் பார்த்தேன். வீட்டின் போட்டோக்களையும் பார்த்தேன். வீடு பிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் குடிவருகிறேன்' என்று கூறியுள்ளார்.

ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்
ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்

நண்பரின் மகனுக்கு உற்சாகம் கரைபுள ஆரம்பித்துவிட்டது, ராணுவ மேஜரே நம் வீட்டுக்கு குடிவருகிறார் என்று! மாத வாடகை, அட்வான்ஸ் அனைத்தும் சொல்லப்பட, மறுபேச்சில்லாமல் சம்மதம் தெரிவித்த 'மேஜர்', 'அட்வான்ஸ் பற்றி என்னுடைய அலுவலகப் பணியாளர் சட்டப்பூர்வமாக உங்களுடன் பேசுவார்' என்று கூறியுள்ளார். மறுநாள், வந்தது ஒரு போன். மேஜரின் அலுவலகப் பணியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தக் குரல், 'உங்களுடைய வீட்டுக்கு மேஜர் அட்வான்ஸ் கொடுக்கச் சொன்னார். எங்கள் ராணுவ அலுவலக நடைமுறைப்படி ஜிபே மூலமாகத்தான் பணத்தை அனுப்பமுடியும். எனவே, உங்களுடைய ஜிபே விவரங்களை அனுப்புங்கள்' என்று கூறியுள்ளார்.

அதன்படியே தகவல்களைப் பகிர்ந்துள்ளார் நண்பரின் மகன். சிறிதுநேரம் கழித்துத் தொடர்புகொண்டு பேசிய மேஜரின் அலுவலகப் பணியாளர், 'உங்களுடைய ஜிபே விவரங்கள் கிடைத்தன. எங்களுடைய அலுவலக நடைமுறைப்படி ரிவர்ஸ் டிரான்ஸ்பர் செய்யவேண்டும். மிலிட்டரி என்பதால் இப்படியெல்லாம் விதிமுறைகள் உள்ளன. அதனால், என்னுடைய எண்ணுக்கு ஜிபே மூலமாக 25 ஆயிரம் ரூபாயை அனுப்பினால், அந்தப் பணத்துடன் சேர்த்து வீட்டுக்கான அட்வான்ஸ் பணத்தை நாங்கள் திருப்பி அனுப்பிவிடுவோம்' என்று கூறியுள்ளார்.

ஏமாற்று
ஏமாற்று

அந்த நொடியில், நண்பருடைய மகனுக்கு ஏதோ பொறிதட்ட, 'இப்படியெல்லாம் கேள்விப்பட்டதில்லையே'

என்று யோசிக்க ஆரம்பித்தவர், குரலில் கொஞ்சம் கறாரைக் கூட்டிக்கொண்டு, 'அதுதான் ஜிபே விவரங்களைக் கொடுத்துவிட்டேனே. அதற்கே பணத்தை அனுப்புங்கள்' எனகூறி போனை வைத்துவிட்டார்.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் போன். இந்த முறை லைனில் வந்தவர் 'மேஜர்'. 'என்னுடைய சகபணியாளர் சொல்வதுபோல் 'ரிவர்ஸ் டிரான்ஸ்பர்' என்கிற பழக்கம் ராணுவத்தில் நடைமுறையில் இருக்கிறது. மிலிட்டரியில் பணியாற்றுவதால், வெளிநபர்களுக்கு நேரடியாக பணத்தை அனுப்பக் கூடாது. அதேசமயம், வெளிநபர்கள் அனுப்பினால், அதை கணக்குக் காட்டி நாம் அனுப்ப முடியும். அதற்காகத்தான் கேட்கிறோம். எனவே நீங்கள் நம்பி பணத்தை அனுப்புங்கள். எங்களுடைய அலுவலகத்திலிருந்தே உங்களுடைய பணம் மற்றும் அட்வான்ஸ் பணமும் சேர்த்து அனுப்புவார்கள்' என்று கூறியுள்ளார்.

 ஆகா... 'ஜம்தாரா பார்ட்டிகள்'தான் என்பதை தீர்க்கமாகவே முடிவு செய்துவிட்ட நண்பரின் மகன், 'நான் அப்படியெல்லாம் அனுப்பமுடியாது. என்னுடைய அக்கவுன்ட் எண்ணுக்கு நீங்கள் பணம் அனுப்புங்கள்' என்று போனை வைத்திருக்கிறார்.

 மீண்டும் போன். இந்தத் தடவை மேஜரின் அலுவலக பணியாளர். 'சார், எங்கள் ராணுவ அலுவலகத்துக்குக் கணக்குக்குக் காட்டத்தான் 25 ஆயிரம் ரூபாய் கேட்டோம். அவ்வளவுகூட அனுப்ப வேண்டாம் ஒரே ஒரு ரூபாய் அனுப்பினால்கூட போதும்... உங்களுக்கு அட்வான்ஸ் பணத்தை உடனே அனுப்புகிறோம்' என்று கூறியுள்ளார்.

போன் கால் ஏமாற்று
போன் கால் ஏமாற்று

'நான் அனுப்புவது கடினம். நீங்கள் ஒரு ரூபாயை என்னுடைய அக்கவுன்ட்டுக்கு அனுப்புங்கள். அந்தப் பணம் வந்தவுடன் உங்களுக்குத் தகவல் தருகிறேன். அதன்பிறகு, முழுப்பணத்தையும் அனுப்புங்கள்' என்று நண்பரின் மகன் சொல்ல, எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு, மேஜரோ... மைனரோ... யாரிடமிருந்தும் போன் வரவே இல்லை..

ஆக, ஒரு பைசாவைக்கூட இழக்காமல் தப்பிவிட்டார் நண்பரின் மகன். ஆனால், எத்தனை பேரால் இப்படித் தப்பிக்க முடிகிறது. ஏமாந்தவர்களின் சதவிகிதம்தான் அதிகம்.  கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் தினமும் ஏமாந்துகொண்டேதான் உள்ளனர்.

 இங்கே, 'மேஜர்' என்கிற விஷயம் பற்றியும் கொஞ்சம் அடிக்கோடிட்டு சொல்லியே ஆகவேண்டும். 'வந்தே மாதரம்' என்கிற ஒலி கேட்டதும் அட்டேன்ஷனில் நிற்கும் நம்முடைய தேசபக்தியும்கூட அவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது. மேஜர், ராணுவம், விமானப்படை என்கிற வார்த்தைகளையெல்லாம் கேட்டு நாம் புல்லரித்துவிடுவோம். 'அங்கே எல்லையில் நம் ராணுவ வீரர்கள்' என்றதும் நமக்கு இருப்புக் கொள்ளாது. இதையெல்லாம் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டே 'ராணுவத்தில் மேஜர்' என்ற புரூடாவை எடுத்துவிட்டு ஏமாற்றுவதை ஒரு கும்பல் தொடர் டெக்னிக்காக வைத்துள்ளது.

போன் அழைப்பு
போன் அழைப்பு
Representational Image

'டெல்லிக்கு டிரான்ஸ்ஃபர் செய்வதால், திருச்சியில் நான் பயன்படுத்திய 12 லட்ச ரூபாய் காரை, 5 லட்ச ரூபாய்க்கு விற்கிறேன்',

'காஷ்மீருக்கு டிரான்ஸ்பர் என்பதால், புதிதாக 50 லட்சத்தில் புதுக்கோட்டையில் கட்டிய வீட்டை 30 லட்சத்துக்கு விற்கிறேன்', 'டிரான்ஸ்பர் காரணமாக 128 இன்ச் டிவி, ஹோம்தியேட்டர் உள்ளிட்ட 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை 8 லட்சத்துக்கு விற்கிறேன்' என்று 'மேஜர்'கள் பலரும் கலர்கலராக எடுத்துவிட்டுக் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற எத்தனையோ மோசடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டாலும், பக்கத்துவீட்டுக்காரன் அனுபவித்தாலும்கூட அத்தனையையும் பார்த்துவிட்டு, 'ஏமாறுவதற்காகவே பிறந்தவர்கள் போல' திரிகிறோம்.

குறிப்பாக, நாம் எதிலெல்லாம் பதறுவோமோ... அதெல்லாம்தான் அவர்களுக்குச் சாதகம். அந்தக் கணநேர பதற்றத்தில் பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கிறது. இன்னும் போகப்போக என்னவெல்லாம் காரணங்களைக் கண்டுபிடிப்பார்களோ தெரியாது. முடிஞ்சா நண்பரின் மகன் போல எல்லாரும் உஷாராகிக்கிடுங்க மக்கா!

-கே.ஜெயராமன்