சமூகம்
அலசல்
கார்ட்டூன்
அறிவிப்புகள்
Published:Updated:

ஐந்தாம் கட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்!

கீழடி
பிரீமியம் ஸ்டோரி
News
கீழடி

கீழடி ஆய்வு அதிசயம்!

கீழடியில் கடந்த 13-ம் தேதி ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங் கிய சில நாட்களிலேயே தொன்மையான இரட்டைச் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்தியத் தொல்லியல் துறை நீண்டகாலத்துக்குப் பிறகு மிகப் பெரிய திட்டமாகக் கீழடியில் 2015-ல் முதல்கட்ட ஆய்வைத் தொடங்கியது. இதில் தலைமைத் தொல்லியலாளராகப் பணியாற்றியவர் மதுரையைப் பூர்வீகமாகக்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன். முதல் கட்ட ஆய்விலேயே பானைகள், யானைத் தந்தத்தினால் ஆன தாயக் கட்டைகள் உட்பட 4,125 அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. பழங்காலத்திலேயே நாகரிகமாக வாழந்தவன் தமிழன் என்பதற்குக் கீழடியில் கிடைத்தப் பொருள்கள் சான்றாக அமைந்தன.

மத்திய அரசு மேற்கொண்டு நிதி ஒதுக்காத நிலையில், கீழடி ஆய்வைத் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொள்ளும் என்று அறிவித்து, நான்காம் கட்ட ஆய்வைக் கடந்த ஆண்டு நடத்தி முடித்தது. ஐந்தாம் கட்ட பணியைத் தேர்தல் முடிந்த பின், 47 லட்ச ரூபாய் ஒதுக்கி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடந்த 13-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில், மதுரை சி.பி.எம். எம்.பி-யும் கீழடி பற்றி எழுதி வருபவருமான சு.வெங்கடேசனும் கலந்துகொண்டார். தற்போது ஆரம்ப கட்ட வேலைகள் நடந்துவரும் நிலை யில்தான் இந்தப் பிரமாண்ட இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட ஆய்வு நடைபெறும் பகுதியைச் சென்று பார்த்தோம். இப்பகுதி கீழடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கொந்தகை ஊராட்சியை யொட்டி அமைந்துள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பள வுள்ள தனியார் நிலத்தைக் குத்தகைக்குப் பெற்று அதிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அழித்து, கவனத்துடன் குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணி
ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணி

வேலை தொடங்கிய இரண்டு வாரத்துக்குள் இரட்டைச் சுவர் தென்பட்டுள்ளது. பெரிய செங்கல்வைத்துக் கட்டப்பட்டுள்ள அச்சுவர் ஓரடி உயரம் மட்டும் வெளியேத் தெரிகிறது. குழிகளை ஆழமாகத் தோண்டிய பிறகுபோதுதான் அந்தச் சுவரின் முழு உயரம், அது அரண்மனைச் சுவரா அல்லது வீட்டின் சுவரா என்பது தெரியும். அது மட்டுமல்லாமல் இன்னும் சில மண்பாண்டப் பொருள்களும் கிடைத்துள்ளன.

அதுபற்றி அங்கு ஆய்வு செய்துவரும் தொல்லியலாளர் ஆசைத்தம்பியிடம் கேட்டதற்கு, ‘‘இப்போதுதான் சில பொருள்கள் கிடைத்துவருகின்றன. இந்தச் சுவர் பற்றியும் மற்ற ஆய்வுகள் பற்றியும் இப்போதைக்கு எந்தக் கருத்தும் சொல்ல முடியாது’’ என்றார். ஆய்வுபற்றி ஊடகங்களிடம் பேசக்கூடாது என்று ‘அதிகாரத்தில் உள்ளவர்கள்’ கூறியிருப்பதாக அங்குள்ள பணியாளர்கள் கூறினார்கள்.

இந்நிலையில், கீழடி ஆய்வில் ஈடுபட்டுவரும் சிலர் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசியபோது, ‘‘வைகை நதி, தொடங்கி முடிவடை யும் தூரம்வரை இரண்டு கரைப் பகுதிகளிலும் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டதால், மத்திய அரசு பெங்களூரு மண்டல தொல்பொருள் அகழ்வாய் வுத்துறையின் கண்காணிப்பு அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு கீழடி பணியைத் தொடங்க உத்தர விட்டது. அவர்கள் தேனி மாவட்டம், மூலவைகை முதல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் வரை வைகை நதியின் இரு கரைகளிலும் 293 பகுதிகளை ஆய்வுசெய்ய முடிவெடுத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நகரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. அதில் முக்கியமான இடம் கீழடி பள்ளிச்சந்தை பகுதியாகும். இங்கு முகாமிட்டு ஆய்வுகளைத் தொடங்கியபோது செங்கல்லில் கட்டப்பட்ட வீடுகள், மண்பாண்ட ஓடுகள், முத்து, கல், கண்ணாடி மணிகள், கலைநயமிக்க பானைகள், உறை கிணறுகள், உலோக ஆயுதங்கள், கழிவுநீர்க் குழாய்கள், தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட ஓடுகள் என ஆயிரக்கணக்கான பொருள்கள் கிடைத்தன. ஆனால், எந்தவொரு மத அடையாளங்களும் கிடைக்க வில்லை. இது தமிழரின் தனித்த அடையாளம் என்பதால், ஆய்வைத் தொடர மத்திய அரசுக்கு மனமில்லை. கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தக்கூட தடை போட்டது.

ஆய்வுப் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர்
ஆய்வுப் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர்

அது மட்டுமல்லாமல், சிறப்பாகச் செயல்பட்ட தொல்லியல் அறிஞர் அமர்நாத்தை அஸ்ஸாமுக்குத் தூக்கியடித்தார்கள். அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த தமிழ்ச் சங்க மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள அமர்நாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவருக்கு அனுமதி மறுத்தது அரசு. இந்த நிலையில், ராம் என்பவர் தலைமையில் மூன்றாம் கட்ட ஆய்வை மத்திய அரசு நடத்தியது. அதிலும் 1,800 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், அதோடு மத்திய அரசு ஆய்வை முடித்துக்கொண்டது. இது தமிழக அரசியல் தலைவர்களிடமும் தமிழ் உணர்வாளர் களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத் தொல்லியல் துறை கீழடி ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டார்’’ என்றனர்.

கீழடியின் ஆய்வு, தமிழரின் தொன்மைப் பெருமையைப் பறைசாற்றும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!