Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: ஈரோடு, விருதுநகர், சிவகங்கை

7.7.2019 தேதியிட்ட ஜூனியர் விகடனில், தமிழக நீர்நிலை ஆதாரங்களின் நிலை குறித்து சிறப்புப் பக்கங்கள் வெளியிட்டிருந்தோம். அவற்றின் தொடர்ச்சி இதோ...

பிரீமியம் ஸ்டோரி

ஈரோடு: கடலில் கலக்கும் தண்ணீர்... கண்டுகொள்ளாத அரசு!

ஈரோடு மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரம், பவானி சாகர் அணை. இந்த அணையை நம்பித்தான் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் நடக் கிறது. பவானி ஆற்றின் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர்த் திட்டங்கள், ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி திருப்பூர் மாவட்ட மக்களுக்கும் தாகம் தீர்க்கின்றன. காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

1621.5 சதுர மைல் பரப்பளவுள்ள பவானி சாகர் அணை யின் உயரம், 105 அடி. இதில் 32.5 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். இப்போது பவானி சாகர் அணையில் 55.4 அடி உயரத்தில் 5.8 டி.எம்.சி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதம் பவானி சாகர் அணையில் 79 அடி தண்ணீர் இருந்தது.

பவானி ஆறு மற்றும் மாயாறு ஆகியவற்றில் இருந்து பவானி அணைக்குச் சில தினங்களுக்கு முன்பு வரை... தினமும் 1,900 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. தற்போது, 165 கன அடி தண்ணீர்தான் வருகிறது.

அந்தியூரில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு, காடு களில் பெய்யும் மழைநீர்தான் ஆதாரம். இந்த அணையில் மொத்தம் 139.6 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இப்போது அணையில் 11.4 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருக்கிறது. வனவிலங்குகள் இந்த அணையில்தான் தண்ணீர் குடிக்கின்றன. அணையிலிருக்கும் தண்ணீர் இன்னும் 15 நாள்களுக்குத்தான் வனவிலங்குகளுக் குப் போதுமானதாக இருக்கும். வரட்டுப்பள்ளம் அணை முழு தாக நிரம்பிய பிறகு வழிந்துவரும் நீர்தான், கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஐந்து பெரிய ஏரிகளுக்கு நீராதாரம். இந்த ஏரிகள்தான் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குக் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக அணை நிரம்பாததால், இந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. அதனால், அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பருவகாலங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்தாலும் நீர்த்தேக்கங்கள் இல்லாததால் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை.

விருதுநகர் - 15 ஆண்டுகளாகக் கசியும் நீர்... அதிகாரிகளின் அலட்சியம்!

விருதுநகரின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பது, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டம். மாவட்டத்தின் முக்கியக் குடிநீர் ஆதார மாக ஆனைக்குட்டம் அணை திகழ்கிறது. அணையின் நீர்மட்டம் 7.5 மீட்டர். இதன் மொத்தக் கொள்ளளவு, 125.8 மில்லியன் கன அடி. வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை நிரம்பி, அங்கே இருந்துவரும் உபரி நீரும், இப்பகுதியில் பெய்யும் மழை நீரும் ஆனைக்குட்டம் அணையில் தேக்கி வைக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனைக்குட்டம் அணை
ஆனைக்குட்டம் அணை

இந்த அணை விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால், இந்த ஆண்டு மழையில்லாததால், அணையில் போதிய தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அணை யின் அருகே உள்ள உறை கிணறுகளிலிருந்து குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் 6 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முழுவதும் சேதமடைந்துள்ளன. அதனால், கடந்த 15 ஆண்டுகளாக ஷட்டரிலிருந்து கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருக்கிறது.

சுமார் 80 அடி ஆழம்கொண்ட ஒண்டிப்புலி நாயக்கனூர் கல் குவாரியும் குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால், முழுக் கொள்ள ளவை எட்டியிருந்த குவாரி தண்ணீர், தற்போது கீழே சென்று விட்டது. ஆனால், இந்தத் தண்ணீரை அருந்துவதால் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாவதாகப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மழை இல்லாததால் அணைகளின் தண்ணீர் இருப்பு பெருமளவு குறைந்துள்ளது. ஆனாலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர் நீராதாரம் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் வீதம் இன்னும் ஒன்றரை மாதத்துக்குக் குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகங்கை - 75 குடிநீர்த் திட்டங்கள்... ஆனால், குடிக்கத் தண்ணீர் இல்லை!

சிவகங்கை மாவட்டத்தில் அணைகள் எதுவும் இல்லை. குளங்கள், கண்மாய்கள் நிறைந்த மாவட்டம். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மாவட்டம் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக்கிறது. மாவட்டத் தின் முக்கிய நகரமான காரைக்குடிக்குக் கிடைத்த வரப்பிரசாதம் சம்பை ஊற்று. இந்த ஊற்று என்றைக்கும் வற்றியதில்லை.

காய்ந்துகிடக்கும் குளம்
காய்ந்துகிடக்கும் குளம்

இங்கிருந்துதான் காரைக்குடி முழுமைக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. காரைக்குடி கெமிக்கல் கம்பெனிக்கும் இந்த ஊற்றுத் தண்ணீர்தான் விநியோகிக்கப்படுகிறது

இந்த ஊற்றில் சாக்கடைக் கழிவுகளும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளும் கலக்கின்றன. மேலும் சம்பை ஊற்று, அதலை சங்கு சமுத்திரம், பெரிய கண்மாய் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கின்றன. சிவகங்கை மாவட்டத்துக்கென்று கூட்டுக்குடிநீர்த் திட்டம் தனியாக இல்லை. பொதுப்பணித் துறை வசம் 678 கண்மாய்களும் 4,288 யூனியன் கண்மாய்களும் இருக்கின்றன. வைகை ஆறு, மணிமுத்தாறு, விருசுளி ஆறு, பாலாறு, உப்பாறு உள்ளிட்ட ஆறுகள் இருக்கின்றன. மாவட்டம் முழுவதும் 55 தடுப்பணைகள் உள்ளன. ஆனால், அந்தத் தடுப்பணைகளுக்கான வரத்துக் கால்வாய்கள் எல்லாம் புதர் மண்டிக் கிடக்கின்றன.

எங்கு தோண்டினாலும் சுவையான மேல் ஊற்றுத் தண்ணீர் கிடைக்கும். இப்போது, தண்ணீரே இல்லை. மேலூரிலிருந்து சிவகங்கைக்கு வரவேண்டிய முல்லைப் பெரியாறு தண்ணீரும் வருவதில்லை.

சாயல்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட சுமார் 75 குடிநீர் திட்டங்கள் சிவகங்கை பகுதியில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர்கூட சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்படவில்லை. தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு