Published:Updated:

"விண்வெளிக்கு ஆய்வுப் பொருள்களை அனுப்பலாம்" - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு!

சு.சூர்யா கோமதி

விண்வெளிக்கு அருகில் எந்த மாதிரியான பொருள்களை அனுப்பலாம், அப்படி அனுப்பப்படுபவை என்ன மாற்றத்துக்கு உட்படும் என்கிற ஆய்வுக்கான ஆரம்பம்தான் இந்தப் போட்டி.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

விண்வெளி பற்றித் தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும். விண்வெளியில் அல்லது விண்வெளி பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வது எல்லாம் நடுத்தர மக்களுக்குச் சாத்தியமா என்கிற எண்ணத்தை உடைக்கும் விதமாக , அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து 'சாராபாய் விண்வெளி சவால் 2019' என்ற ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் செயலாளர் அருணிடம் பேசினோம்.

''விண்வெளி குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்குமான வாய்ப்பு இது என்றுதான் சொல்ல வேண்டும். விண்வெளிக்கு அருகில் என்னென்ன பொருள்கள் அனுப்பலாம், அப்படி அனுப்பப்படும் பொருள்கள் என்ன மாற்றத்துக்கு உட்படும் என்பதை அறிந்துகொள்வதற்கான போட்டிதான் இது. இதன்படி விண்வெளிக்கு அருகில் என்னென்ன பொருள்களை அனுப்பலாம் என்பதை மாணவர்கள் எங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். மாணவர்கள் பரிந்துரைக்கும் பொருள்களின் மீது ஆய்வுகள் மேற்கொள்ள ஆகும் செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பெறப்படும் பரிந்துரைகளிலிருந்து 10 பரிந்துரைகள் மட்டும் தேர்வு செய்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பரிந்துரைக்கான பொருள்களை 3.8 செ.மீ அளவுள்ள பெட்டியில் வைத்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி என்.எஸ்.எல்.வி என்ற பலூன் சாட்டிலைட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம்.

விண்வெளி ஆராய்ச்சி
விண்வெளி ஆராய்ச்சி

தேர்ந்தெடுக்கப்படும் மாணவனின் பள்ளிக்கும் பரிசுகள் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். விண்வெளிக்கு அருகில் சென்ற பொருள்கள், பூமிக்குத் திரும்பிய உடன் அந்தப் பொருள்கள் மீதும், அவற்றில் நடந்த மாற்றங்கள் மீதும் ஆய்வு நடத்தி அடுத்தடுத்த தளங்களில் பயணிக்க உள்ளோம்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தனி நபராகவோ இரண்டிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழுவாகவோ பங்கெடுக்கலாம். விண்வெளியில் அழுத்தங்களைக் கண்டறியும் கருவிகள், தானியங்கள் என எவற்றை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். ஜூலை 18-ம் தேதியே விண்ணப்பிக்க இறுதி நாள். இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்வெளி
விண்வெளி

நீங்கள் பரிந்துரை செய்யும் பொருள் 3.8 செ.மீ பெட்டிக்குள் அடங்குவதாக இருக்க வேண்டும். ஒரு பள்ளியின் சார்பாக ஒரு குழு மட்டுமே கலந்துகொள்ள முடியும். மாணவர்களுக்கு விண்வெளி ஆர்வத்தை ஏற்படுத்தவே இந்த சிறு முயற்சி" என்கிறார்.