நடப்பு
Published:Updated:

பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள்!

பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள்!

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க தயாராக இருப்பதாக புதுடெல்லியில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் அறிவித்திருக்கிறார் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி. இன்றைக்கு இந்தியா முழுக்க 79 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், இந்த நிறுவனங்களில் இந்திய அரசின் முதலீடு சுமார் ரூ.1.57 லட்சம் கோடி இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

அமைச்சரின் இந்த அறிவிப்பு எந்த வகையிலும் நியாயமானதில்லை என்றே சொல்லலாம். பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டு களாகவே லாபம் சம்பாதிக்கவில்லை எனில், அதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனங்களை நடத்திவரும் மத்திய அரசுதான். அரசு கால்பதித்துள்ள துறைகளில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் அதிக லாபத்துடன் செயல்படும்போது, பொதுத்துறை நிறுவனங்கள் மோசமாகச் செயல்படுவது அரசாங்கத்தின் குற்றமே ஒழிய, அந்த நிறுவனத்தின் குற்றமல்ல.

இப்போது நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம், மத்திய அரசாங்கத்துக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கலாம். ஆனால், இந்த நிறுவனங்களில் இதுநாள் வரை வேலை பார்த்த பல லட்சம் ஊழியர்களின் கதி என்னவாகும்? 

பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள்!

புதிய நிறுவனங்களைத் தொடங்குவதில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்போது,  ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களை ஏன் தானம் தரவேண்டும்? இதற்கு பதில், இதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சந்தையின் இன்றைய தேவைக்கேற்ப புதிய பயிற்சி தந்து உற்பத்தித் திறனைப் பெருக்கலாமே! இந்த முயற்சிக்கு ஊழியர் களும் மனமுவந்து முழு ஆதரவு தந்தால், இன்று நஷ்டம் தரும் இந்த நிறுவனங்கள் இன்னும் சில ஆண்டுகளில் ஏன் லாபப் பாதைக்குத் திரும்ப முடியாது?

வங்கி, பொறியியல் என பல்வேறு துறைகளில் நன்கு லாபம் சம்பாதித்துத் தரும் பல பொதுத்துறை நிறுவனங்கள் இன்றைக்கும் உதாரணங்களாக இருக்கும்போது, அரசுத் துறை நிறுவனம் என்றாலே உருப்படாது என்று நினைக்கிற மனப்போக்கை மோடி அரசாங்கம் முதலில் மாற்ற வேண்டும். இதைத் தவிர்த்து, பொதுத்துறை நிறுவனங்களை கை கழுவ நினைப்பது மக்கள் நம்பிக்கையோடு தந்திருக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு சமமாகும்.

- ஆசிரியர்.