Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

மாலை வேளையில், ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, என்னைத் தவிர வேறு வாடிக்கையாளர்கள் யாரும் அங்கே இல்லை. நண்பருக்காகக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் சில குடும்பங்கள் ஆங்காங்கே டேபிள்களை ஆக்கிரமித்தன. அடுத்து, பிறந்த நாள் பார்ட்டிக்காக ஒரு பட்டாளமே கலக்கலாக உள்ளே புகுந்தது. ‘வந்துகொண்டிருக்கிறேன்’ என்கிற குறுஞ்செய்தி மட்டும்தான் வந்துகொண்டிருந்தது நண்பரிடமிருந்து.

பர்த் டே பார்ட்டி ஆரம்பமாக, கேக்கை பெட்டியில் இருந்து பத்திரமாக வெளியே எடுத்தவர்கள், பெட்டியை அலட்சியமாக தரையில் வீசினர். அடுத்து, ‘டுப்’ என்று வெடி சத்தம் எழ, வண்ண வண்ண துண்டுக் காகிதங்கள் பறந்து, பக்கத்து டேபிள்களின் உணவுகளின் மீதும் விழுந்தன.

நமக்குள்ளே...

பேப்பர் பிளேட்டில் இருந்த கேக்கை ஒரு குழந்தை தரையில் போட்டுவிட, ‘அதை எடுக்காதே, வேற கேக் எடுத்துக்கொள்!’ என்று அறிவுரை சொன்னார் அம்மா. தரையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லை. மாறாக, கீழே கிடந்த கேக்கை காலால் மிதித்து ஓட்டல் முழுவதும் பரப்பிக்கொண்டிருந்தனர். பர்த்டே பேபியின் முகத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு கேக்கை பூசியவர்கள், ஹோலி மாதிரி ஒருவர் மீது ஒருவர் எனவும் பூசிக்கொண்டார்கள்.

பிறகு, கர்ம சிரத்தையாக டிஷ்யூ பேப்பரை கத்தையாக வாங்கி முகம் மற்றும் ஆடைகளில் இருந்த கேக்கை துடைத்து எடுத்து, கொஞ்சம்கூட யோசிக்காமல் தரையில் வீசினார்கள். பார்ட்டி முடிந்தபோது... பளபளப்பான மார்பிள் தரை, அலங்கரமான டேபிள், ரெஸ்ட் ரூம்... அனைத்தும் குப்பைத் தொட்டிகளாகியிருந்தன. அந்த நேரம் உள்ளே நுழைந்த நண்பர், ‘ச்சே... என்ன இவ்வளவு குப்பையா இருக்கு. வேற ஓட்டலுக்கு போகலாம்!’ என்று அழைத்துச் சென்றுவிட்டார்.

‘க்ளீன் இந்தியா’ என்றபடி கமல்ஹாசன் முதல் த்ரிஷா வரை பொது இடங்களை சுத்தம் செய்வதை, ‘சபாஷ்’ போட்டு வரவேற்கும் நம்மில் பலரும், ‘பர்த் டே’ என்று இல்லை... தீபாவளி, போகி, பொங்கல் என்று எல்லா கொண்டாட்டங்களையும், குப்பைகளை குவிக்கும் தினமாகவே மாற்றி வருகிறோம்.

‘க்ளீன் இந்தியா’ திட்டத்தில் இணைந்துதான் சுத்தப்படுத்த வேண்டும் என்பதில்லை. குப்பைத் தொட்டியைத் தவிர, வேறு இடங்களை குப்பையாக்காமல் இருந்தாலே போதும்தானே தோழிகளே?

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்