Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

ழமான சிந்தனைகொண்ட எளிய கதை ஒன்றைத்தான் இங்கே உங்களிடம் இப்போது சொல்லப் போகிறேன்.

படித்து முடித்து, கைநிறைய சம்பளம் தரும் வேலைகளில் சேர்ந்து, நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள், தாங்கள் படித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியரைச் சந்திக்க, கூட்டாகச் சென்றனர். அங்கே சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருந்த உரையாடல், திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்தவர்களை உபசரிப்பதற்காக சமையலறைக்குச் சென்ற பேராசிரியர், திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் பழரசத்தையும், பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடிக் கோப்பையென விலை உயர்ந்தவைகளாகவும், அழகிய வேலைப்பாடுகளுடனும் இருந்தன. சில கோப்பைகள் மிகமிகச் சாதாரணமாக இருந்தன. அனைத்தையும் மேஜை மீது வைத்துவிட்டு, ``பழரசத்தைக் கோப்பைகளில் ஊற்றிக் குடியுங்கள்'' என்று சொன்னார் பேராசிரியர்.

ஆளுக்கொரு கோப்பையில் பழரசத்தை ஊற்றி அனைவரும் அருந்தத் தொடங்க, பேராசிரியர் பேச ஆரம்பித்தார்... ``நண்பர்களே... எல்லோருமே விலை உயர்ந்த, அழகழகான கோப்பைகளில் பழரசத்தை எடுத்திருக்கிறீர்கள். மிகச்சாதாரண, விலை குறைந்த கோப்பைகள்தான் மேஜையில் மிச்சமிருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்பார்க்கிறீர்கள். அதுதான் பிரச்னைகளுக்கும் மனஅழுத்தத்துக்கும் காரணம்.

உண்மையில் அனைவருக்கும் வேண்டியது கோப்பை அல்ல, பழரசம். ஆனால், எல்லோரும் ஆடம்பரமான கோப்பையைத்தான் எடுக்க முயற்சித்தீர்கள்... அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுக்கிறார் என்பதையும் நோட்டமிட்டபடியே!

வாழ்க்கை என்பதை பழரசம் என்று வைத்துக்கொண்டால்... வீடு, வாகனம், ஆபரணங்கள், அலைபேசிக் கருவிகள், அதை வைக்கும் கைப்பை, வாங்கும் ஆடைகள்... அனைத்தும் கோப்பைகளே! இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.

கோப்பையின் மீதே கவனம் வைப்பதால், பழரசத்தின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம். கோப்பைகளில் கவனத்தை சிதறவிடாமல், பழரசத்தின் சுவையை அனுபவியுங்கள்'' என்றார் பேராசிரியர்.

`சமீபத்தில் நான் படித்த இந்தக் கதை எனக்குள் மிகப்பெரிய தெளிவையும், புரிதலையும் ஏற்படுத்தும்விதத்தில் இருக்கிறது' என்று சொல்லி, வாசகி ஒருவர்தான் இதை எனக்கு அனுப்பியிருந்தார். அந்த வாசகிக்கு கிடைத்த தெளிவும், புரிதலும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்தானே!

உரிமையுடன்,
ஶ்ரீ
ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism