
கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று நான்கு பேர் கொண்ட சிறு குடும்பம்தான் அது. ஆரம்பத்தில் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்டே அவர்களுக்குப் பெரிதாக இருந்தது. நாளாக ஆக நிறைய துணிகள் சேர்ந்தன. இவற்றுக்காக இரண்டு அலமாரிகளை வாங்கினார்கள். என்றாலும், துவைத்த துணி... துவைக்காத துணி என்று எப்போதும் வீடு முழுக்க துணிகள் இறைந்து கிடந்தன.
அழுக்குத் துணியை போட்டு வைக்க இரண்டு பிரம்புக் கூடைகள் வாங்கியும் பிரச்னை தீரவில்லை. காரணம்... துவைத்த துணியை அன்றன்றே மடித்து, அலமாரியில் அடுக்க யாருக்கும் நேரமில்லை. இதனால், துவைத்த துணிகளைப் போட்டு வைப்பதற்கென்றும் தனியாக இரண்டு கூடைகளை வாங்கிச் சேர்த்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கூடைகளுக்கே வீடு போதாததால், மூன்று பெட்ரூம் கொண்ட விசாலமான வீட்டில் குடியேறியவர்கள், ‘பிள்ளங்க எல்லாம் பெரியவங்களாயிட்டாங்க... வீடு பத்தல!’ என்று காரணத்தையும் சொல்லிக்கொண்டார்கள்.
`விசாலமான வீடாயிற்றே’ என்றபடி அதிஅவசியமானது, அத்தனை அவசியமில்லாதது, அவசியமே இல்லாதது என்று ஏகப்பட்ட சாமான்களை வாங்கிச் சேர்த்தார்கள். ‘வீடு முழுக்க இப்படி சோஃபா செட், டிரெஸ்ஸிங் டேபிள், அயர்ன்டேபிள், ஷோகேஸ், கட்டில்னு வாங்கிப் போட்டா, ஒவ்வொண்ணுக்கு கீழேயும் குனிஞ்சு யாரு பெருக்குறது? அது கிடக்குது போ!’ என்ற மனநிலைக்கு அந்த வீட்டினர் வந்துவிட்டனர்.
இது எந்தக் குடும்பம் என்று தேடிக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இப்படி பல குடும்பங்களை நமக்கும் நன்றாகத் தெரியும்தானே? பெரிய வீட்டுக்கு குடிபோவதிலும், புதிதாக பொருட்களை வாங்குவதிலும் இருக்கும் ஆர்வம், அவற்றையெல்லாம் முறையாகப் பராமரிப்பதில் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. `ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்’ (Small is beautiful) என்பதை காலம் கடந்துதான் பலரும் புரிந்துகொள்கிறார்கள்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே, லே-அவுட் செய்த ஒரு கட்டுரையின் பக்கங்களை எடுத்து வந்தார் உதவி ஆசிரியர். `‘இடம் இருக்கிறது என்பதற்காக பக்கம் முழுக்க எழுத்துக்களால் நிரப்பக் கூடாது என்பதுதானே லே-அவுட் இலக்கணம். பக்கத்துக்கு வெற்றிடங்கள்தான் அழகை கொடுக்கும்’’ என்று சொல்லி, அதிகமாக இருக்கும் செய்தியை எடிட் செய்ய ஆரம்பித்தேன்.
பத்திரிகை லே-அவுட்டுக்கு பொருந்துவது, வீட்டை அலங்கரிப்பதற்கும், பராமரிப்பதற்கும் பொருந்தும்தானே தோழிகளே!
உரிமையுடன்,
ஶ்ரீ
ஆசிரியர்