Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

14 வருடத்துக்கு முன்பே, ஒரு பெண்ணுக்குள் சானியாவைக் கண்டாள்... அவள்! 

'வீட்டை ஆளும் பெண், ஏன் விண்ணையும் தொடக்கூடாது' என்றாள்!

'வீரமொழி பேசுபவள், ஏன் வக்கீலாகக் கூடாது' என்றாள்!

'கை வைத்தியத்தில் கலக்குபவள், ஏன் கைராசி டாக்டராகக் கூடாது' என்றாள் அவள்!

'சமையலறையில் இருப்பவள், ஏன் சகலமும் சாதிக்க முடியாது' என்றாள்!

இன்றைய பெண்ணின் ஆசைகளை அன்றே புரிந்து கொண்டதால்தான், 'முன்னேறி வரும் தமிழ்ப் பெண்ணின் முகம்... தமிழ்க் குடும்பங்களின் தலைமகள்...' என்றெல்லாம் நீங்கள் பெருமையோடு இவளைக் கொண்டாடுகிறீர்கள்!

'வாசகி' என்கிற அளவோடு ஒதுங்கி நிற்காமல், ஒவ்வொரு கட்டத்திலும் அவள் விகடனுக்கு தோள் கொடுக்கும் தூண்கள் நீங்களே! சமையல் குறிப்பு... என் டைரி... சாதனை அனுபவங்கள்... என்று புரட்ட புரட்ட 'அவள் விகடன்' எங்கும் உங்களின் கைவண்ணம்தான்.

எழுதுவதும்... எழுதப்படுவதும் நீங்களாகவே இருப்பதில்தான் மிளிர்கிறாள் அவள்! 'வாசகியர்களுக்காக வாசகிகளே நடத்தும் இதழ்' என்று சொல்வதுகூட பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது, பூரித்து நிற்கும் இந்த 14-ம் ஆண்டு பிறந்த நாளில்!

இந்த மகிழ்ச்சியான தருணத்தில்... குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாழ்த்து மடல், பூங்கொத்து என்று அனுப்பி, எப்படியெல்லாம் அன்பை வெளிப்படுத்திவிட்டீர்கள்! இதைவிட, இன்னும் உயர்ந்த பரிசை உங்களிடம் எதிர்பார்க்கிறாள் 'அவள்'. அது... இன்னும் இன்னும் உங்களுக்கான களம் விரிவடைய வேண்டும்; உங்கள் பங்களிப்பு இன்னும்கூட கூடுதலாக பெருக வேண்டும்; இந்த பந்தம் மேலும் இறுக வேண்டும்!

வழக்கம்போல, உங்களின் யோசனைகள் பலவற்றை முன் வைத்தே இந்த மெகா சிறப்பிதழில் புதிய பகுதிகள் பலவும் படையெடுத்து வருகின்றன. படியுங்கள்... விமர்சியுங்கள்... வெளிப்படையாக!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

அடுத்த கட்டுரைக்கு