Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:

கோயம்புத்தூர், சாய்பாபா காலனியில் வசிக்கும் புனிதவதியின் வீட்டைப் பற்றி இந்த இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் நமது நிருபர். இதைப் பற்றி முதலில் அவர் சொன்னபோது ஆச்சர்யப்பட்டுத்தான் போனேன். அடுத்தவர்களிடம் பகிர்ந்தபோது, அவர்களும் அதிசயிக்கவே செய்தனர். சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், சமையலுக்குத் தேவையான பயோகேஸ் தயாரிப்பு மற்றும் மழைநீர் மூலமாக மினரல் வாட்டருக்கு இணையான குடிநீர் என்று அந்தக் குடும்பம் அசத்தவே செய்கிறது!

நமக்குள்ளே!

மின்சாரம், எரிவாயு இதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும். அவர்களின் மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் தேவைக்காக சென்னையைப் போல தமிழகம் முழுவதுமே தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அனைவருக்குமே பாடம்தான் சொல்கிறது!

சிலபல ஆண்டுகளுக்கு முன், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கியது. ‘எந்த வீட்டில் மழைநீர் சேகரிப்பு வசதி இல்லையோ, அந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்!’ என்று எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, அடித்துப் பிடித்து மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்தினார்கள் பலரும். இதன் பலன், அடுத்துவந்த சில ஆண்டுகளுக்குக் கண்கூடாகத் தெரிந்தது. ஆனால், கடமையே என்று செய்யப்பட்ட அந்த அமைப்புகள், முறையான பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் பெரும்பாலும் பயனற்றுப் போய்விட்டன. தற்போது, நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு இறங்கிவிட, பருவமழை கண்ணாமூச்சி ஆட, ஒரு குடம் தண்ணீருக்காக நடுஇரவில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய கொடுமையைப் பலரும் அனுபவிக்கிறோம்.

காவிரியிலும் தண்ணீர் இல்லை... கிருஷ்ணாவிலும் தண்ணீர் இல்லை. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என்று வழக்கம்போல ஆரம்பமாகிவிட்டன, கடைசி நேர சித்துவிளையாட்டுகள். ஆனால், இதையெல்லாம் நம்பிக்கொண்டிருந்தால்... இனி கதைக்காகாது என்பதுதான் உண்மை.

புனிதவதி அளவுக்கு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் முறையான மழைநீர் சேகரிப்பு வசதியையாவது ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்துவதுதான் எதிர்காலத்தை, இருண்டகாலம் ஆக்காமல் இருக்கும். மழைநீர் சேகரிப்புக்கு சில ஆயிரங்களே செலவு பிடிக்கும். இதை, எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாக நினைத்து, நிச்சயமாக செய்யலாம்தானே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்