Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

வாழ்வின் எல்லா நிலைகளிலும் புதிதாக ஒரு விஷயத்தைத் தேடுவது புத்துணர்வைத் தரும் என்பதைத்தான் இந்தமுறை கூற விரும்புகிறேன். உற்சாகத்தோடு டென்னிஸ் ஆடும் 67 வயது பெண்மணி, ‘வயதானால் என்ன... தெம்பிருக்கிறது இன்னமும்’ என்று ஆட்டோ ஓட்டும் பெண்மணி, ‘குடும்பத்தலைவிக்கு இதெல்லாம் எதுக்குனு யோசிக்காம  என் பையனோட பியானோ கத்துக்கிறேன்’ என்று சொல்லும் பெண்மணி, `அப்புறம் பாத்துக்கலாம்’ என தள்ளிவைக்காமல் பல படிநிலைகளைக் கடந்து தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவி என பலதரப்பட்ட வயதினரைப் பார்த்து வருகிறோம்.

நமக்குள்ளே!

எந்த வயதில் நாம் இருந்தாலும் சரி... இளமையுடனும் துடிப்புடனும் புத்துணர்வுடனும் இருக்கிற வரையில் நாம் எப்போதும் இளையவர்களே! ஆதலால் உடலையும் மனதையும் எந்த அளவுக்கு வலிமையானதாக வைத்துக் கொள்ள முயல்கிறோமோ, அந்த அளவுக்குப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதுதான் உத்தமம் இல்லையா தோழியரே!

நாம் விருப்பப்பட்டு, இதுவரை  செய்யாத ஒரு நற்செயலை செய்ய வேண்டும் என மனது நினைத்துவிட்டால், அந்தச் செயலை செய்வதும் மனதை இளமை மாறாமல் வைத்திருக்க உதவும்.

இந்த விடுமுறை நாளில் குழந்தைகளுடன் சேர்ந்து பேட்மின்டன், சைக்கிளிங் என விளையாடி  தங்களைக் குழந்தைகளாய் பாவிக்கும்  பலரை வீதியில் பார்க்க முடிகிறது. `இந்த விளையாட்டுகளில் ஈடுபட தங்கள் உடல் ஒத்துழைக்காது’ என்கிற மனநிலையை தூக்கி எறிந்துவிட்டு, புத்துணர்வால் தங்கள் வயதைக் குறைத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.

இப்படிச் சொல்வதால்... சாகசங்கள் செய்தால்தான் புத்துணர்வு வரும் என்பதில்லை. மனதில் புதிதாய் முளைத்த கவிதையை எழுதுவது, புதிதாய் மாடித்தோட்டம் அமைப்பது,  புதிதாய் ஒரு ரெசிப்பியை சமைப்பது என சின்னச் சின்ன புதிய தேடல்களிலும் புத்துணர்ச்சி பூக்கட்டுமே!
எப்போதெல்லாம் ஒரு சோர்வு நம்மை தொடுவதை உணர்கிறோமோ, அப்போதெல்லாம் அதை மாற்ற சிறந்த வழி - செய்யாததை செய்வதுதான். காலையில் மலர்ந்த பனிபடர்ந்த பூவைப் போலவே மலர்ச்சியுடன் புத்துணர்வு கொடுக்கும் மாமருந்தல்லவா அது!

உரிமையுடன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!



ஆசிரியர்