பிரீமியம் ஸ்டோரி

‘போதும், போதும்’ என்கிற அளவுக்குக் கொட்டித் தீர்த்தது மழை. - இது கடந்த ஆண்டு!

நமக்குள்ளே...

‘வேண்டும் வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டே இருக்கிறோம். - இது இந்த ஆண்டு.

தமிழகத்தின் மழைக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மழை எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.

‘மழை வருவதற்கும்... வராமல் போவதற்கும் இயற்கைதான் காரணம். நம் கையில் என்ன இருக்கிறது’ என்று சொல்லி யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது. காடுகளை அழித்துக்கொண்டே இருக்கிறோம்; நீர்நிலைகளை காலி செய்துகொண்டே இருக்கிறோம்; நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை தாறுமாறாக எரித்து வளிமண்டலத்தையே புகையால் நிரப்பிக்கொண்டே இருக்கிறோம். இதனால் மனிதர்களின் வாழ்க்கை முறையே, முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதாகவே மாறிவிட்டது. அதனால்தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட பணத்தட்டுப்பாட்டைப் போலவே, நம்மால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நீர்த்தட்டுப்பாடும் நம்மை இப்போது சூழ்ந்துகொண்டு மிரட்டுகிறது!

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான பாகங்களிலும் பணத்தைப் போலவே, தண்ணீருக்கும் வரிசையில் நிற்கும் காட்சிகள் கண்முன்னே வரிசை கட்டுகின்றன!

இதற்குக் காரணம்... போதுமான மழையின்மை மட்டுமல்ல, வீட்டில் செலவு செய்யும் நீர் தொடங்கி, விவசாயம், தொழிற்சாலைகள் என நீரின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்வதும்தான். பணத்தை தண்ணீராகச் செலவு செய்யப் பழகியவர்கள், இப்போது சிக்கனமாக செலவு செய்ய முடியாமல் திண்டாடுகிறோம். பணத்தையே தண்ணீராக செலவழிக்கும் நாம்... தண்ணீரை எப்படி தாறுமாறாக செலவழிக்கிறோம் என்பதை இப்போதாவது உணர்வோமா!

இப்போது குடிப்பதற்குத்தான் நீரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். நிலைமை இப்படியே போனால்... மற்ற எல்லாத் தேவைகளுக்குமான நீரையும் கட்டாயமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை. இப்போதேகூட பல ஊர்களில் இப்படித்தான் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்துள்ளனர்.

சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்குவதோடு, எதிர்கால நீர்த்தேவைக்காக நீராதாரங்களைப் பாதுகாப்பதும் அவசியம். மரம் நடுவதைக் கடமையாகக் கொள்ளுங்கள். வீட்டில் இடம் இல்லாதவர்கள் உங்கள் வீதியில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே மரம் வளர்ப்பதை கடமையாகச் செய்யுங்கள். இந்த முயற்சி, நம் ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் தொடங்கட்டுமே!

உரிமையுடன்,

நமக்குள்ளே...ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு