பிரீமியம் ஸ்டோரி

ஜெர்மனி நாட்டின் உணவு விடுதிகளில் சாப்பிடுபவர்கள், தட்டில் மிச்சம் எதுவும் வைக்கக் கூடாது. மீறினால், உணவுக்கான விலையோடு, அபராதத் தொகையையும் செலுத்தினால்தான் உணவு விடுதியைவிட்டே வெளியேற முடியும்.

நமக்குள்ளே!

இதை இந்தியாவில் அமல்படுத்தினால்... அத்தகைய முயற்சியை எடுப்பவர்கள்தான் நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும்!

ஆம், உணவுப் பொருட்களை வீணடிப்பதில் நமக்கு நிகர் நாமேதான். உற்பத்தியாகும் பொருட்களில் பாதிக்குப் பாதி வீணடிக்கிறோம். ஒவ்வொரு வீட்டின் குப்பைக் கூடையைப் பார்த்தாலே... இந்த உண்மை விளங்கிவிடும். வீட்டுக்குள் இப்படியென்றால்... உணவகங்கள், திருமணங்கள், கொண்டாட்டங்கள் என நினைக்கும்போது ரத்தக் கண்ணீர்தான் வருகிறது.

எனக்குத் தெரிந்த அந்தக் குடும்பம், உணவைக் கையாளும் விதம், அனைவருக்குமான பாடம். உதாரணத்துக்கு, இரவு உணவுக்கு ஆளுக்கு 4 தோசை தேவைப்படும் இடத்தில், 3 தோசைக்கான மாவு மட்டும்தான் இருக்கிறது என்றால், கடைக்குப்போய் கூடுதலாக மாவெல்லாம் வாங்கி வருவதில்லை. ஆளுக்கு ஒரு தோசை என சாப்பிட்டுவிடுவார்கள். `என்னது... ஒரு தோசை போதுமா?' என்று பதறாதீர்கள். அதன் பிறகு பழம், பிரெட், பிஸ்கட், ஜூஸ் என வீட்டிலிருக்கும் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுவிடுவார்கள். எந்த உணவாக இருந்தாலும் இப்படி பற்றாக்குறையோடு தயாரித்துக்கொண்டு, கூடவே பழங்கள், கேரட், வெள்ளரிக்காய் என்று சமாளித்துவிடுவார்கள். `ஆறு சப்பாத்தி இல்லாமல் என் வயிறு நிறையாது... ஏழெட்டு மீன்வறுவல் என் இலக்கு...' என எந்த பிடிவாதமும் அந்த வீட்டில் நான் பார்த்ததில்லை.

`உணவை மிச்சப்படுத்துகிறேன்' என பட்டினி கிடக்கவும் செய்யாமல், தேவைக்கு அதிகமாகத் தயாரித்துக் குப்பையில் கொட்டவும் செய்யாமல் திட்டமிட்டு வாழும் இப்படி சில குடும்பங்களை நீங்களும் கவனித்திருக்கக்கூடும்... அல்லது அத்தகைய குடும்பங்களில் ஒன்றாக நீங்களும் இருக்கக்கூடும். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்தக் குடும்பங்களும் இப்படி மாறினால் எப்படி இருக்கும்?!

இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், உணவுப் பொருள் தட்டுப்பாடு எனும் பேராபத்து நம்மை மிரட்டிக்கொண்டிருக்கிறது. கூடவே, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வேறு கூடுதல் நெருக்கடிகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஒவ்வோர் அரிசி, ஒவ்வொரு கோதுமை என உணவுப் பொருட்களின் மதிப்பை உணர்ந்து, வீணடிக்காமல் இருக்கப் பழகலாம்தானே தோழிகளே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!


  ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு