பெண்கள், அரசியலில் கால்பதிப்பதே மிகமிகக் கடினமான ஒன்று. இத்தகையச் சூழலில், ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது ஒட்டுமொத்த பெண் குலமும் பெருமைகொள்ளும் விஷயம்தானே... `நம்முடைய பிரதிநிதி’ என்று நினைத்து பெருமைகொள்வோம்தானே! ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்த ஜெயலலிதாவின் மறைவு; அதைத்தொடர்ந்து அவருடைய தோழி சசிகலாவின் அரசியல் பிரவேசம் எனத் தமிழக அரசியலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமீபத்திய மாற்றங்களைக் கவனிக்கும்போது கவலைதான் மேலிடுகிறது!
ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட செப்டம்பர் 22-ம்

தேதியிலிருந்தே நம் வீட்டின் வரவேற்பறையில் அரசியல் குறித்து ஆர்வத்தோடும் கவலையோடும் அலசிக்கொண்டுதானே இருக்கிறோம். `ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்... சசிகலா முதல்வராகப்போகிறார்' - இப்படி எல்லாம் அடுத்தடுத்து வெளியான செய்திகள் நம் ஒவ்வொருவரின் உரையாடலிலும் இடம்பெறத்தானே செய்தன! ஆனால், `சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள்’ என்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு, பெண் என்பதால் நாம் கொண்ட பெருமைகளையெல்லாம் சிதறடித்துவிட்டது. அதிலும், தண்டனை அறிவிப்புக்கு முன்பாக தான் காட்டிய முகம் ஒன்று... தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு, தான் காட்டிய முகம் வேறு என்கிற வகையில் சசிகலாவின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள், அனைவரையும் யோசிக்கவைக்கின்றன.
`ஒரு பெண் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காகவே இங்கே பல சதிகள் நடக்கின்றன. பெண் என்பதாலேயே நானும் ஜெயலலிதாவும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தோம்’ என்றெல்லாம் சொல்கிறார் சசிகலா.
இங்கே ஒரு விஷயத்தை, நாம் அனைவரும் கட்டாயம் கவனிக்க வேண்டும். இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, அரசியலில் நிலைத்து, ஆட்சியைப் பிடித்தது சாதனையாக இருக்கலாம். அதற்காக, தவறுக்கு மேல் தவறுகளை இழைத்துவிட்டு, தண்டனை என்று வரும்போது, `ஆணாதிக்க சதி’ என்று சொல்லி இரக்கத்தைப் பெற நினைப்பது எந்தவகையில் நியாயமாக இருக்க முடியும்?
பெண்ணுக்கான நியாயங்கள், சலுகைகள் என்றெல்லாம் ஒருபக்கம் பேசிக்கொண்டே, மறுபக்கம் பெண் என்பதற்காகவே தவறுகளுக்கும் சலுகைகளை எதிர்பார்ப்பது சரியில்லைதானே தோழிகளே!
உரிமையுடன்,
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசிரியர்