Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

ந்தப் பள்ளி வளாகத்தில் அன்று கண்ட காட்சிகள், மருத்துவமனையை ஞாபகப்படுத்துவது போலிருந்தன.

ஒரு பெண், அழுதுகொண்டே இருக்கும் தன் மூன்று வயதுக் குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார். குழந்தையைத் தேற்றுவதையும் மறந்து, வளாகத்தில் காத்திருந்த மற்ற குழந்தைகளையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். பள்ளி முதல்வரின் அறைக்குள்ளே அழைத்துச் செல்லும் பெற்றோர் பலர், பின்பு வெளியே வரும்போது குழந்தைகளைத் தேவையில்லாமல் அச்சுறுத்துவதும், அழவைப்பதுமாக இருந்தனர். கிட்டத்தட்ட தடுப்பூசி முகாம் போலவேதான் இருந்தன அந்தக் காட்சிகள்.

நமக்குள்ளே!



மூன்று வயதுக் குழந்தையை `ப்ரி கே.ஜி' வகுப்பில் சேர்த்துக்கொள்வதற்காக தனியார் பள்ளிகள் பலவும் வரையறுத்து வைத்திருக்கும் விதிமுறைகள், உலகமகா கொடுமை! `ஒரு வயதாகிறது... இன்னும் அச்சுப்பிறழாமல் பேசத் தெரியவில்லை இந்தக் குழந்தைக்கு’ என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ, அப்படியான அபத்தங்களைத்தான் பெரும்பாலான பள்ளிகள் செய்துவருகின்றன. ’உனக்குத் தெரிஞ்ச ரைம்ஸ் சொல்லு பார்ப்போம்; இதுல எது லேவண்டர் கலர்; ஏபிசிடி சொல்லுங்க; உங்க நேமுக்கு ஸ்பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்’ என்பது போன்ற வாய்மொழிக் கேள்விகளே... அந்த வயதுக்கு அதிகம்தான். இந்த நிலையில், செயல்முறை தேர்வுகளையும் அந்த பச்சைமண்ணின் மீது திணிக்கும் பள்ளிக்கூடங்களை எதில் சேர்ப்பது?

குழந்தைகள், குழந்தைகளாக இருப்பதுதான் அழகு. வீட்டில் படுசுட்டியாக இருக்கும் சில குழந்தைகள், பொது இடங்களில் அமைதியாக இருப்பார்கள். பொது இடங்களில் துறுதுறுவென்றிருக்கும் குழந்தைகள், வீட்டில் அமைதியாக இருப்பார்கள். அந்தந்த நேரத்தில் குழந்தை என்ன மனநிலையில் இருக்கிறதோ... அதை வைத்துதான் அதன் செயல்பாடுகளும் இருக்கும். இதுதான் இயற்கை எனும்போது, உடல் மற்றும் மூளைத்திறன் அடிப்படையில் பள்ளியில் அட்மிஷன் கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

’நம் குழந்தை நன்றாகப் படித்தால்தானே அதன் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்’ என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், வியாபாரக் கூடங்களாகிவிட்ட பள்ளிகள் ஆட்டுவிக்கும் அனைத்துக்கும் தெரிந்தே நாமும் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

`இப்படியெல்லாம் படித்தவர்களின் எதிர்காலம்தான் சிறப்பாக இருக்கிறது... மற்றவர்களின் எதிர்காலம் சிறக்கவே இல்லை’ என்பதற்கு ஏதாவது சான்றுகளை வைத்திருக்கிறோமா என்ன?

கல்வியைக் கற்றுக்கொடுப்பதற்கும் திணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறதோ இந்தச் சமூகம்?!

உரிமையுடன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!

ஆசிரியர்